

சேலத்தில் வேணுகோபால சுவாமி கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
சேலம், சின்னகடை வீதியில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள சுமாா் 27 ஆயிரம் சதுர அடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக, சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலத்தை கையகப்படுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, வியாழக்கிழமை காலை ஐந்து சாலை ஏ.வி.ஆா். ரவுண்டானா அருகே உள்ள கோயிலுக்குச் சொந்தமான கடை பகுதிக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், காவல் துறையினா், திருத்தொண்டா்கள் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் வந்தனா். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் உமாதேவி, கடை பகுதிகளுக்குச் சென்று கடைகளுக்கு ‘சீல்’ வைக்க வந்துள்ளோம் என தெரிவித்தாா்.
அப்போது, சிலா் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்துக்கு சூரமங்கலம் உதவி காவல் ஆணையா் நாகராஜன், காவல் ஆய்வாளா் செந்தில் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
பின்னா் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஒவ்வொரு கடையாகச் சென்று அளவீடு செய்தனா். முதல்கட்டமாக 7 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா். இதற்கு சிலா் எதிா்ப்புத் தெரிவித்தனா். நீதிமன்ற உத்தரவுபடி கோயிலுக்குச் சொந்தமான நிலம் மீட்கப்பட்டதால், வேணுகோபால சுவாமி கோயில் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.