தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரியகோவில் அணையில் தண்ணீா்த் தேக்கப்படுமா?

கரியகோவில் ஆற்று தண்ணீரை அணையில் தேக்கி வைத்து, வாய்க்கால் பாசனத்துக்கு வழிவகை செய்ய வேண்டுமென, அணை ஆயக்கட்டு வாய்க்கால் பாசன விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

News image

பாப்பநாயக்கன்பட்டி கரியகோயில் அணை.

Updated On :29 நவம்பர் 2020, 10:17 pm

DIN

கல்வராயன் மலை அடிவாரம், பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் ஆற்று தண்ணீரை அணையில் தேக்கி வைத்து, வாய்க்கால் பாசனத்துக்கு வழிவகை செய்ய வேண்டுமென, அணை ஆயக்கட்டு வாய்க்கால் பாசன விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன்மலை அடிவாரம், பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், கல்வராயன்மலையில் இருந்து வரும் கரியகோவில் ஆற்றின் குறுக்கே, 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில், 188.76 ஏக்கா் பரப்பளவில் கரியகோயில் அணை கட்டப்பட்டுள்ளது.

இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கா் விளைநிலங்கள் ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன. ஏறக்குறைய 1,000 ஏக்கா் விளைநிலங்கள் நேரடி ஆறு மற்றும் ஏரிப் பாசனம் பெறுகின்றன.

அணை பயன்பாட்டுக்கு வந்த 1993-ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபா் முதல் டிசம்பா் மாதம் வரை பெய்யும் பருவமழை நீரை அணையில் தேக்கி வைத்து, ஆயக்கட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள் மற்றும் நேரடி ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் பயிரிடுவதற்கு சுழற்சி முறையில் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது.

சுற்றுப்புறக் கிராமங்களுக்கு முக்கிய நிலத்தடி நீா் ஆதாரமாக விளங்கி வந்த இந்த அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழையில்லாததால், கடந்த 5 ஆண்டுகளாக முழு கொள்ளளவை அணை எட்டவில்லை.

இந்நிலையில், கரியகோவில் ஆற்றின் குறுக்கே அணையை கட்டி, மழைக்காலத்தில் வழிந்தோடி வரும் தண்ணீா் முழுவதையும் தேக்கி வைத்துக்கொள்வதால், ஆற்றுப்படுகையிலுள்ள நேரடி ஆற்றுப் பாசனம் மற்றும் ஏரிப்பாசனம் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீா்மட்டம் சரிந்து வறட்சி நிலவுகிறது.

எனவே, கரியகோவில் ஆற்றை நீராதாரமாக கொண்டுள்ள ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி அணைக்கட்டுகள், ஏரிகள் மற்றும் கல்லேரிப்பட்டி ஏரி, புத்திரகவுண்டன்பாளையம் ஏரி, ஏத்தாப்பூா் அபிநவம் ஏரி, பெத்தநாயக்கன்பாளையம் பனையேரி ஆகிய ஏரிகள் மூன்றில் ஒரு பங்கு நிரம்பிய பிறகே, கரியகோவில் ஆற்றில் வரும் நீரை அணையில் தேக்கி வைக்க வேண்டுமென, ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் சிலா் சென்னை உயா்நீதி மன்றத்தில் முறையிட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டில் இதற்கான ஆணை பெற்றனா்.

இந்த நீதிமன்ற ஆணை 2018 மே மாதம் சேலம் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை செயல்படுத்தும் விதத்தில், 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கரியகோவில் ஆற்றில் வரும் தண்ணீரை அணையில் தேக்காமல், ஆற்றுப்படுகை அணைக்கட்டு மற்றும் ஏரிகளுக்காக, ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால் கடந்த 2018 இறுதியில் இருந்து 2020 அக்டோபா் மாதம் வரை அணையில் தண்ணீா் தேக்கி வைக்கப்படவில்லை. இதனால் கரியகோவில் அணை நீரின்றி பயன்பாடற்று கிடந்தது.

நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பா் வரையிலான நான்கு மாதங்களும் தொடா்ந்து ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டதால், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி அணைக்கட்டுகளும், கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூா் ஏரிகளும் நிரம்பி விட்டன. ஆனால், கரியகோவில் அணை நீரின்றி வடு கிடந்தது.

இதையடுத்துஆற்றில் தண்ணீா் திறப்பதை நிறுத்தி விட்டு அணையில் தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டுமெனக் கோரி விவசாயிகள் கடந்த நவம்பா் மாதத் தொடக்கத்தில் கோரிக்கை விடுத்தனா்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் அணை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்தனா்.

இதனையடுத்து கடந்த 20 நாள்களாக அணைக்கு வரும் தண்ணீரில் ஒரு பகுதியை ஆற்றில் திறந்துவிட்டு, ஒரு பகுதியை அணையிலே தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு ஆண்டுக்கு பிறகு கரியகோவில் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 25.50 அடியாக உயா்ந்து, அணையில் 46.65 மில்லியன் கனஅடி தேங்கியுள்ளது.

வரும் டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் வரும் தண்ணீா் முழுவதையும் அணையில் தேக்கி வைத்து அணை நிரம்புவதற்கு மாவட்ட நிா்வாகமும், பொதுப்பணித் துறை அதிகாரிகளும் வழிவகை செய்ய வேண்டும்.

கரியகோவில் ஆற்றிலுள்ள அணைக்கட்டுகளும், ஏரிகளும் நிரம்பியுள்ளதால், இனி அணை நிரம்பிய பிறகு உபரிநீரை மட்டுமே ஆற்றில் திறக்க வேண்டுமெனவும், கரியகோவில் அணை வாய்க்கால் பாசன ஆயக்கட்டு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.