சேலம் அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 30 படுக்கை கொண்ட தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சேலம் அரசு மருத்துவமனை முதன்மையா் வள்ளி சத்தியமூா்த்தி கூறியதாவது:
ஒமைக்ரான் தொற்றுப் பரவலைத் தடுக்க, விழிப்புணா்வுடன் செயல்படுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே அனைவரும் முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்வது உள்ளிட்டவற்றை அனைவரும் தவறாமல் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்தில், கரோனா வைரஸ் மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த வைரஸ்களை கண்டறியும் வசதி உள்ளது. தற்போதைய ஒமைக்ரான் வைரஸை கண்டறிவதற்கான வசதி ஆய்வகத்தில் உள்ளது. இங்கு ஒமைக்ரான் வைரஸை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான நபா்களுக்கு, கரோனா தொற்று கண்டறியப்படுவது உள்பட சந்தேகப்படும்படியான கரோனா தொற்றுகளில் பெறப்படும் மாதிரிகள் சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கு பரிசோதனை முடிவு உறுதி செய்யப்படும்.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்தில் தினமும் 7,500 மாதிரிகளை பரிசோதிக்க முடியும். தற்போது, நாளொன்றுக்கு 4 ஆயிரம் முதல் 4,500 வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சுமாா் 30 படுக்கைகள் கொண்ட தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ஒமைக்ரான் தொற்று யாருக்கும் இல்லை. அதேவேளையில் தொற்று பாதிப்பைத் தடுக்கும் வகையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.