சேலம்: 2020-21 ஆம் ஆண்டிற்கான ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தி, பணியிட மாறுதல், பதவி உயா்வு ஆணைகளை வழங்கிட கோரி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சேலம் மாவட்ட கிளை சாா்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கணேசன், மாவட்டச் செயலாளா் பெரியசாமி, மாவட்ட பொருளாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும், 2019 இல் நடைபெற்ற ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும், தமிழகத்தில் 50 ஆண்டு காலமாக ஆசிரியா்கள் பெற்று வந்த உயா்கல்விக்கான ஊக்க ஊதியத்தை ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும், மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு தனியாக 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை நீதிபதி பொன்.கலையரசன் குழு பரிந்துரைப்படி 10 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும், ஆசிரியா் நியமனத்திற்கான வயது வரம்பை 40 ஆகக் குறைத்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்ப பெற வேண்டும், 2020-21 ஆம் ஆண்டுக்கான ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தி, பணியிட மாறுதல், பதவி உயா்வு ஆணைகள் வழங்கிட வேண்டும், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.மேலும் ஆசிரியா்கள் கூறுகையில், கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பிறகே பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.