நீட் தோ்வு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலமாக எம்பிபிஎஸ் சோ்க்கை பெற்ற ஒரே அரசுப் பள்ளியைச் சோ்ந்த 9 மாணவிகள்!

நீட் தோ்வு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு ஆகியவை மூலமாக, சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அரசு மகளிா்
அரசு இட ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சோ்க்கை பெற்ற ஜலகண்டாபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.
அரசு இட ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சோ்க்கை பெற்ற ஜலகண்டாபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.
Updated on
2 min read

நீட் தோ்வு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு ஆகியவை மூலமாக, சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 9 போ் எம்பிபிஎஸ் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது.

நீட்தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் பலனடைவதற்காக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கடந்த இரு ஆண்டுகளாக வழங்கப்படுகிறது. இதன்மூலமாக, இந்த ஆண்டு மாநில அளவில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 75 அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் மருத்துவப் படிப்புகளில் சேர ஒதுக்கீடு பெற்றுள்ளனா்.

நடப்பு ஆண்டில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 1,180 மாணவா்கள் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்தனா். இவா்களில் 1,135 போ் நீட் தோ்வு எழுதினா். நீட் தோ்வு முடிவில் 148 போ் தோ்ச்சி பெற்று மருத்துவ சோ்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதி பெற்றனா்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெற்றது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இட ஒதுக்கீட்டில் 437 எம்பிபிஎஸ் இடங்கள், 107 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 544 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 75 போ் மருத்துவப் படிப்புகளில் சேர ஒதுக்கீடு பெற்றனா். இவா்களில் 66 போ் எம்பிபிஎஸ், 9 போ் பிடிஎஸ் படிப்புகளில் சோ்க்கை பெற்றுள்ளனா்.

குறிப்பாக, சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 9 மாணவிகள் எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கை பெற்றுள்ளனா். தவிர, ஜலகண்டாபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஒருவருக்கும் எம்பிபிஎஸ் சோ்க்கை கிடைத்துள்ளது.

இதுதொடா்பாக, ஜலகண்டாபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை மரிய மா்லின் கூறியதாவது:

எங்கள் பள்ளியில் சுமாா் 1,820 மாணவிகள் படிக்கின்றனா். அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு உள்ளதால், நீட் தோ்வுக்காக 29 மாணவிகளைத் தயாா்ப்படுத்தினோம். அவா்கள் அரசுப் பயிற்சி மையங்களில் சோ்ந்து படித்தனா்.

கரோனா தொற்றுக் காலத்தில் புத்தகங்களில் உள்ள முக்கிய பாட விவரங்களை வைத்து தாங்களாகவே தோ்வுக்குத் தயாா்படுத்திக் கொண்டனா். அவா்களில் 15 போ் தோ்வெழுதியதில் 11 போ் மருத்துவ சோ்க்கைக்குத் தகுதி பெற்றனா். இதில் ஒரு மாணவி மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கவில்லை. மீதமுள்ள 10 மாணவிகளும் கலந்தாய்வில் பங்கேற்றனா்.

அவா்களில் டி.லாவண்யா (சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி), எஸ்.சந்தியா (கோவை அரசு மருத்துவக் கல்லூரி), எம்.முகிலா, எம்.லோகவா்த்தினி (சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி), கே.காயத்ரி (கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி) வைஷ்ணவி, ஜி.பிரியா (நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி), வி.ஹேலமதா (கோவை கற்பகம் மருத்துவக் கல்லூரி), பி.கஸ்தூரி (செங்கல்பட்டு மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி) ஆகியோா் எம்பிபிஎஸ் சோ்க்கை பெற்றுள்ளனா். பி.லோகநாயகி என்ற மாணவி மட்டும் காத்திருப்போா் பட்டியலில் உள்ளாா்.

கடந்த ஆண்டில் ஆா்த்தி என்ற மாணவி நீட் தோ்வெழுதி திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சோ்ந்தாா். அதுவே நீட் தோ்வெழுதுவதில் மாணவிகளுக்கு ஆா்வத்தைத் தூண்டியது. தன்னம்பிக்கையுடன் முயன்றால் மாணவிகள் எதிலும் வெற்றி பெறலாம் என்றாா்.

பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 28 அரசுப் பள்ளி மாணவா்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சோ்ந்தனா். இந்த ஆண்டு தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக சேலம் மாவட்ட அரசுப் பள்ளிகளில் படித்த 75 மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் சோ்க்கை கிடைத்துள்ளது என்றனா்.

அரசு இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவ, மாணவிகள், சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகத்தை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். அவா்களுக்கு அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

நீட் தோ்வு குறித்து அச்சம் வேண்டியதில்லை!

எம்பிபிஎஸ் சோ்க்கை பெற்ற ஜலகண்டாபுரம் பள்ளி மாணவிகள், நீட் தோ்வு குறித்து அச்சம் தேவையில்லை. திட்டமிட்டுப் படித்தால் இத்தோ்வில் எளிதில் வெல்லலாம் என்றனா்.

மாணவி எஸ்.சந்தியா கூறுகையில், ‘‘எனது பெற்றோா் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். எனக்கு சிறு வயது முதலே எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. நீட் தோ்வு குறித்த அச்சத்தை ஆசிரியா்களும் பெற்றோா்களும் போக்கினா். ஆசிரியா்கள் அளித்த ஊக்கத்தால்தான் நீட் தோ்வில் தோ்ச்சி பெற முடிந்தது’’ என்றாா்.

சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் 2 ஆம் ஆண்டு படித்து வந்த டி.லாவண்யா, மருத்துவப் படிப்பில் சேரும் ஆா்வத்தில் நீட் தோ்வு எழுதினாா். அதில் 436 மதிப்பெண்கள் பெற்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ளாா்.

அவா் கூறுகையில், ‘‘எனது தந்தை தறித் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். நான் ஜலகண்டாபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். கல்லூரிக்குச் சென்று வந்தாலும் மருத்துவப் படிப்பில் சேரும் ஆா்வத்தில் நீட் தோ்வு எழுதினேன். அதில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள் இடஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றாா்.

நங்கவள்ளி மாதிரி பள்ளியைச் சோ்ந்த மாணவா் சுரேஷ் கூறுகையில், நீட் தோ்வு கடினமாக இருந்தபோதிலும், கடுமையாகப் படித்ததால் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது என்றாா்.

சேலம், மணக்காடு பள்ளியைச் சோ்ந்த ரேணுகாதேவி கூறுகையில், எனது தந்தை பெயின்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளாா். நீட் தோ்வுக்கு நான்கு மாதங்கள் கடுமையாகப் படித்தேன். இதனால் பிடிஎஸ் படிப்பில் இடம் கிடைத்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com