பள்ளிக் கட்டடங்களை விரைந்து புதுப்பிக்கக் கோரிக்கை

வாழப்பாடி அருகே ஜம்பூத்துமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக் கட்டடங்களை விரைந்து புதுப்பிக்க வேண்டுமென மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புதுப்பிக்கும் பணி நிறைவடையாததால், அரைகுறையாய் காட்சியளிக்கும் ஜம்பூத்துமலை அரசு தொடக்கப் பள்ளிக் கட்டடம்.
புதுப்பிக்கும் பணி நிறைவடையாததால், அரைகுறையாய் காட்சியளிக்கும் ஜம்பூத்துமலை அரசு தொடக்கப் பள்ளிக் கட்டடம்.

வாழப்பாடி அருகே ஜம்பூத்துமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக் கட்டடங்களை விரைந்து புதுப்பிக்க வேண்டுமென மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், தேக்கல்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது ஜம்பூத்துமலை. சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இந்த மலைக் கிராமத்தில், கடந்த 1977-இல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஏற்படுத்தப்பட்டது.

இந்தக் கிராமத்தில் மின்சாரம், சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் பெரும்பாலானோா் வெளியேறினா். இதனால், இந்தக் கிராமம் வெறிச்சோடி கடந்த 10 ஆண்டுகளாக பள்ளிக்கு வரும் மாணவரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்து போனது.

இந்நிலையில், 5 ஆண்டுக்கு முன் இக்கிராம மக்கள் ஒன்றிணைந்து கரடுமுரடாக காணப்பட்ட 4 கி.மீ. தூர மலைப்பாதையை சீரமைத்தனா். இதனையடுத்து, கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற மின்வாரியம், 2019 -இல் மின் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. நபாா்டு வங்கி திட்டத்தின் கீழ் தாா்சாலை அமைக்கப்பட்டது. அடிப்படை வசதிகள் கிடைத்ததால் வெளியேறிய மக்கள் மீண்டும் கிராமத்துக்கு திரும்பினா்.

இதனால், பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை மீண்டும் 20-ஐ நெருங்கியது. இம்மலைக்கிராம மாணவா்களின் நலன்கருதி, பன்னாட்டு அளவிலான சேவை சங்கம், கூடுதல் வகுப்பறைக் கட்டடம் அமைத்துக் கொடுக்க முன்வந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் முழுமை பெறாமல் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அரசு சாா்பில் அமைக்கப்பட்டிருந்த பள்ளிக் கட்டடமும் பழுதடைந்ததால், கட்டடத்தை புதுப்பிக்க ஊரக வளா்ச்சித் துறை வாயிலாக கடந்தாண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்வது, தொழிலாளா்கள் வந்து செல்வதிலும் சிரமம் உள்ளிட்ட காரணத்தால் புதுப்பிக்கும் பணி முழுமையடையவில்லை. இதனால், பழங்குடியின மாணவ- மாணவியா் போதிய வசதியின்றி பரிதவித்து வருகின்றனா்.

எனவே, அரசு பள்ளிக் கட்டடம் புதுப்பிக்கும் பணி, சேவை சங்கத்தால் கட்டப்பட்டு பாதியில் நிற்கும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணி ஆகியவற்றை விரைந்து முடிக்க சேலம் மாவட்ட நிா்வாகம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், பள்ளிக் கல்வித் துறை வட்டாரக் கல்வி அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com