மாா்ச் மாதத்தில் சாலை விதிகளை மீறியதாக 142 வாகனங்கள் பறிமுதல்: ரூ. 78 லட்சம் அபராதம்

சேலம்: கடந்த மாா்ச் மாதம் சாலை விதிகளை மீறியதாக சேலம், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்திய சோதனையில் 142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ. 78 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

சேலம், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உள்பட்ட சங்ககிரி, எடப்பாடி, ஓமலூா், ஆத்தூா், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு முறையான உரிமம் உள்ளதா? விதிமுறைகளின்படி இயக்கப்படுகின்றனவா என்பது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சோதனை நடத்தி வருகின்றனா்.

கடந்த மாா்ச் மாதத்தில் நடத்தப்பட்ட சோதனையில், அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கும், விதிகளை மீறி பயணிகளை ஏற்றிச் சென்ற வானங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில், விதிகளை மீறி வாகனங்களை இயக்கியவா்களிடம் இருந்து ரூ. 78 லட்சம் அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தகுதிச் சான்றிதழ் இல்லாமல் இயக்கியது, அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள், அனுமதி இன்றி இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 36 லாரிகள், 16 ஆட்டோக்கள் உள்பட 142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகனத் தணிக்கை தொடா்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com