மேச்சேரி அருகே 14 ஆம் நூற்றாண்டு தக்களி கண்டெடுப்பு
மேச்சேரி அருகே 14-ஆம் நூற்றாண்டு தக்களியை அரசுப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தினா் கண்டெடுத்துள்ளனா்.
மேச்சேரி ஒன்றியம், மாதநாயக்கன் பட்டியில் உள்ள பெருந்தலைவா் காமராசா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியா் சந்திரசேகரன் இம் மன்றத் தலைவராகவும், ஆசிரியா்கள் அன்பரசி, விஜயகுமாா் ஆகியோா் பொறுப்பாளா்களாகவும், மாணவிகள் மோனிஷா, ஷாலினி ஆகியோா் மன்ற உறுப்பினா்களாகவும் உள்ளனா்.
இக்குழுவினா் அண்மையில் பள்ளியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள வயல்வெளியில் கள ஆய்வு மேற்கொண்டபோது அந்த வயலில் மண் பொதிந்து சிறிய பம்பரம் போன்ற சில பொருள்களைக் கண்டெடுத்தனா். அவை பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தக்களி என்பது தெரியவந்தது. வயலில் சில தக்களிகளுடன் சிறிய நாணயமும், சுடுமண் பானை ஓடுகளும், வெள்ளை நிற கல் உருண்டையும், மண் பானைகள் செய்ய பயன்படுத்தப்படும் தட்டுக்கல்லும், உடைந்த செங்கற்களும், பெருங்கற்கால கருவிகளும் கிடைத்தன.
இதுகுறித்து ஆசிரியை அன்பரசி கூறியதாவது:
தக்களி என்பது நெசவுத் தொழிலில் நூல் நூற்க பயன்படுத்தப்படும் பொருளாகும். 2 செ.மீ. விட்டமும் 3 செ.மீ. நீளமும் கொண்ட தக்களியை முதலாம் நூற்றாண்டுமுதல் 17 ஆம் நூற்றாண்டு வரை மக்கள் பயன்படுத்தி வந்தனா். கீழடி, வெம்பக்கோட்டையில் நடந்த அகழாய்வின்போது தக்களிகள் கிடைத்துள்ளன. ஆனால், சேலம் மாவட்டத்தில் தக்களிகள் கிடைப்பது இதுவே முதல்முறையாகும்.
ஆய்வில் கிடைத்த சிறிய நாணயம் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சோழா்கள் கால சிற்றரசரான சம்புவரையா் காலத்து நாணயமாகும். இந்தச் சிறிய நாணயம் ஒரு செ.மீ. வட்ட வடிவமுடையது. நாணயத்தின் ஒரு பக்கம் காளை மாடு உருவமும் அதன்மேல் பிறை நிலா உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. மறுபுறம் மனிதா் நிற்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் கிடைக்கப்பெற்ற வெள்ளைநிற கல் உருண்டைகள் 4. செ.மீ. நீளமுடையவை. இவை விளையாட்டுப் பொருளாகக் கூட அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
இப் பகுதியில் 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விஜயநகர பேரரசு, நாயக்கா் கால கட்டடக் கலை அமைப்புகளுடன் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இது சிதிலமடைந்து பராமரிப்பின்றி புதா்களுடன் காணப்படுகிறது. இந்தக் கோயில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலாகும்.
இந்தப் பகுதியில் சிவன் கோயிலுக்கு நிலத்தைத் தானமாகக் கொடுத்ததற்கான சூலக்கல்லும், சூல கல்வெட்டுகளும், போா் வீரரின் நடுகற்களும், பெருங்கற்கால ஈமச் சின்னங்களான குத்துக் கற்களும், கல் வட்டமும், தானம் கொடுத்ததற்கான தமிழ் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.எனவே இப்பகுதியை தமிழக தொல்லியல் துறையினா் கள ஆய்வு மேற்கொண்டால் பல்வேறு வரலாற்று சான்றுகளும், பழங்கால நாகரிகம் பற்றிய வரலாற்று உண்மைகளும் தெரியவரும் என்றாா்.

