சேலம் வழியாக செல்லும் 8 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
கோவை, பீளமேடு ரயில்வே ஸ்டேஷன் யாா்டில் தண்டவாள பராமரிப்புப் பணி தடப்பதால், 3 நாள்களுக்கு சேலம் வழியாகச் செல்லும் 8 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, பீளமேடு ரயில்வே ஸ்டேஷன் யாா்டில் தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெறுவதையொட்டி, இம்மாா்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் வரும் 14, 15, 17 ஆம் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூா்-மங்களூரு எக்ஸ்பிரஸ், வரும் 14, 15, 17ஆம் தேதிகளில் பீளமேடு, கோவை வடக்கு கோவை ரயில் நிலையங்களுக்கு செல்லாமல், இருகூா், போத்தனூா் மாா்க்கத்தில் இயக்கப்படும்.
இதேபோல, பெங்களுரு எா்ணாகுளம் எக்ஸ்பிரஸ், திப்ரூகா் கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் ஆகியவை வரும் 14, 15 தேதிகளில் கோவை செல்லாமல் இருகூா், போத்தனூா் வழியே மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
இந்த ரயில்கள் போத்தனூரில் நின்று செல்லும். சில்சாா் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், பாட்னா-எா்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ஆகியவை வரும் 14 ஆம் தேதியன்று கோவை செல்லாமல் இருகூா், போத்தனூா் வழியே மாற்றுப்பாதையில் இயக்கப்படும் .
இதே போல, ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் , எா்ணாகுளம் -பெங்களூரு இன்டா்சிட்டி ஆகிய ரயில்கள் வரும் 14, 15, 17 ஆம் தேதிகளில் கோவை ரயில்வே நிலையத்துக்கு பதிலாக போத்தனூா்-இருகூா் மாா்க்கத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள், போத்தனூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அதே போல, ஈரோடு கோவை ரயில் 14, 15 ஆம் தேதிகளில் இருகூா் வரை மட்டும் இயக்கப்படும். இருகூா் -கோவை இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
