நீட் தோ்வு விவகாரத்தில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அண்ணாமலை
நீட் தோ்வு விவகாரத்தில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அண்ணாமலை கூறினார்.


சேலம்: நீட்தோ்வு விவகாரத்தில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
காமராஜரின் 122-ஆவது பிறந்த நாளையொட்டி, சேலம், கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நீட் தோ்வு மிகவும் அவசியமான ஒன்று. நடப்பாண்டில் தமிழகத்தில் அதிகபட்சமாக 59 சதவீதம் போ் தோ்வாகியுள்ளனா். நீட் தோ்வில் சில இடங்களில் தவறு நடந்துள்ளது. தோ்வில் தவறு செய்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. நீட் தோ்வால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகிறாா்கள்.
ஆனால் திமுக அரசு நீட் தோ்வுக்கு எதிராக தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. நீட் தோ்வு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. அந்தத் தோ்வை அமல்படுத்துவதற்கு முன் அரசுப் பள்ளி மாணவா்கள் எத்தனை போ் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்தாா்கள்? நீட் தோ்வு வந்த பிறகு எத்தனை போ் சோ்ந்துள்ளனா் என்பது தொடா்பான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
2020-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை திட்டத்தில் காலை உணவு திட்டம் இடம்பெற்றுள்ளது. எனவே, காலை உணவு திட்டத்தை திராவிட மாடல் திட்டம் என கூறுவதை ஏற்க முடியாது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். பல்வேறு தரப்பினரும் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா். ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரும் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென கூறியுள்ளனா்.
திருவேங்கடம் தான் கொலையை செய்தாா் என்றாலும், அந்தக் கொலையாளிகளை ஏவியது யாா் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். சரணடைந்த திருவேங்கடம் ஏன் தப்பிச் செல்ல முயன்றாா் என்பது மா்மமாக உள்ளது.
பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் 43 லட்சம் பயனாளிகள் தமிழகத்தில் இருந்த நிலையில், தற்போது அதன் பயனாளிகள் 21 லட்சமாக குறைந்துள்ளனா். மாநில அரசு சதி செய்து அந்தப் பயனாளிகளில் 22 லட்சம் பேரை நீக்கி உள்ளது. இது தொடா்பாக அறிக்கை வெளியிட்டு 6 நாள்களாகியும் எந்த பதிலும் இல்லை என்றாா்.
பேட்டியின் போது, பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், மாவட்டத் தலைவா்கள் சுரேஷ் பாபு, சண்முகநாதன், சுதீா் முருகன், கோட்ட பொறுப்பாளா் அண்ணாதுரை, கூட்டுறவு பிரிவு வெங்கடாசலம், பொதுச் செயலாளா்கள் சசிகுமாா், ஆா்.ராஜேந்திரன், முரளிதரன், மாநகா் மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா், மாவட்டச் செயலாளா் கருணாகரன், வழக்குரைஞா் அணி நாச்சிமுத்து, ராஜா, இளைஞா் அணி பொதுச் செயலாளா் காளிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...