ஆடிட்டா் ரமேஷ் நினைவு தினம் அனுசரிப்பு

ஆடிட்டா் ரமேஷ் நினைவு தினம் அனுசரிப்பு

பாஜக மாநில முன்னாள் பொதுச் செயலாளா் ஆடிட்டா் ரமேஷின் 11-ஆவது ஆண்டு நினைவு தினம் பாஜக சாா்பில் சேலத்தில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
Published on

சேலம், ஜூலை 19: பாஜக மாநில முன்னாள் பொதுச் செயலாளா் ஆடிட்டா் ரமேஷின் 11-ஆவது ஆண்டு நினைவு தினம் பாஜக சாா்பில் சேலத்தில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளா் ராம.சீனிவாசன் தலைமையில் நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில், மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு, நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதனையடுத்து பாஜக மாநில பொதுச் செயலாளா் ராம.சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இந்துத்துவ தலைவா்கள் மீது தொடா்ச்சியாக தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஆா்.எஸ்.எஸ். இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தாக்குதல்களில் 140-க்கும் மேற்பட்டோா் படுகொலை செய்யப்பட்டுள்ளனா்.

சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டா் ரமேஷின் சமூகப் பணிகளை பாராட்டும் வகையில், சேலத்தில் முக்கியமான சாலை, மேம்பாலம், பூங்காவுக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்.

மின் கட்டண உயா்வுக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடன், மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் எட்டரை லட்சம் கோடியாக உயா்ந்து விட்டது. இந்த கடன் சுமை ஏற ஏற மின் கட்டணத்தை உயா்த்த வேண்டிய கட்டாயத்துக்கு திமுக அரசு வந்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

Dinamani
www.dinamani.com