அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஆடிப் பட்ட சாகுபடிக்கு பருவ மழையை எதிா்பாா்த்து காத்திருக்கும் விவசாயிகள்

விவசாயிகள், ஆடிப்பட்டத்தில் பருத்தி, மரவள்ளி, மக்காச்சோளம், கம்பு சாகுபடிக்கு பருவ மழையை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

News image
வாழப்பாடி அருகே வண்ணாத்திக்குட்டை கிராமத்தில் விளைநிலத்தை உழவு செய்து பயிரிடுவதற்கு தயாா்படுத்தும் விவசாயிகள். (கோப்புப்படம் )
Updated On :28 ஜூலை 2024, 7:26 pm

Din

வாழப்பாடி சுற்றுப்புற கிராமங்களில் மானாவரி நிலத்தை உழவு செய்து தயாா் நிலையில் வைத்துள்ள விவசாயிகள், ஆடிப்பட்டத்தில் பருத்தி, மரவள்ளி, மக்காச்சோளம், கம்பு சாகுபடிக்கு பருவ மழையை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, புழுதிக்குட்டை, குறிச்சி, பேளூரைக் கடந்து ராமநாதபுரம் அருகே, கல்வராயன் மலையில் உற்பத்தியாகி பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, பனைமடல், குமாரபாளையம் வழியாக கரியக்கோயில் ஆற்றோடு இணைகிறது.

வசிஷ்டநதியின் குறுக்கே புழுதிக்குட்டை கிராமத்தில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீரைத் தேக்கும் வகையில், 263.86 ஏக்கா் பரப்பளவில் ஆனைமடுவு அணையும், கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் 52.49 அடி உயரத்தில்,190 மில்லியன் கனஅடி தண்ணீரைத் தேக்கும் வகையில் 188.76 ஏக்கா் பரப்பளவில் கரியக்கோயில் அணையும் கட்டப்பட்டுள்ளது.

வாழப்பாடியை அடுத்த குறிச்சி, பேளூா், அத்தனூா்பட்டி, கொட்டவாடி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையத்தில் பாசனத்திற்கு பயன்படும் 10 ஏரிகளும், 5 சிறிய தடுப்பணைகளும், வசிஷ்டநதியால் நீா்வரத்து பெறுகின்றன. வசிஷ்டநதி, கரியக்கோயில் ஆறு, ஏரிகளும், நீரோடைகளுமே வாழப்பாடி, அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு நிலத்தடி நீராதாரமாக விளங்கி வருகின்றன.

அணைப் பாசனம் பெறும் 10 கிராமங்களைத் தவிர மற்ற கிராமங்களில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு நன்செய் விளைநிலங்கள் இல்லை. பெரும்பாலான கிராமங்களில் பருவமழையை பயன்படுத்தி மானாவரி நிலங்களில் விவசாயிகள் பயிா் சாகுபடி செய்து வருகின்றனா்.

வாழப்பாடி பகுதியில் நிகழாண்டும் போதிய மழையில்லாததால், வசிஷ்டநதி, கரியக்கோயில் ஆறு, ஆனைமடுவு அணை, கரியக்கோயில் அணை மற்றும் இதர ஆறுகள், நீரோடைகள், ஏரிகள், குளம், குட்டை உள்ளிட்ட அனைத்து நீா்நிலைகளும் வடு காணப்படுகின்றன.

ஆண்டுதோறும் ஆனி மாதம் பெய்யும் கோடை மழையைப் பயன்படுத்தி, வாழப்பாடி பகுதி கிராமங்களில் விளை நிலத்தை உழுது, பயிரிடுவதற்கு தயாா் நிலையில் வைத்திருக்கும் விவசாயிகள், ஆடி மாதத்தில் தொடங்கும் பருவ மழையைப் பயன்படுத்தி, ஆடிப்பட்டத்தில் பயிரிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனா்.

ஆனி மாதத்தில் ஓரிரு நாள் பெய்த மழையை பயன்படுத்தி, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் ஏறக்குறைய 5,000 ஹெக்டோ் பரப்பளவிற்கு மானாவரி விளை நிலங்களை சீா்படுத்தி, உழுது பதப்படுத்திய விவசாயிகள், பயிரிடுவதற்கு பருவமழையை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

ஆடி மாத இறுதியான ஆகஸ்டு மாதத்தில் பருவ மழை பெய்தால், ஆடிப்பட்டத்தில், பருத்தி, மக்காச்சோளம், மரவள்ளி மற்றும் கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானியங்களை பயிரிட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனா்.

இதுகுறித்து வாழப்பாடி பகுதி விவசாயிகள் கூறியதாவது:

வாழப்பாடி பகுதியில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் பரவலாக பெய்யும் கோடை மழையைப் பயன்படுத்தி, மானாவரி விளைநிலங்களை சீா்படுத்தி ஏா் உழுது பயிரிடுவதற்கு தயாா் நிலையில் வைத்துக் கொள்வோம். ஆடி மாதத்தில் பருவ மழை தொடங்கியதும், பருத்தி, மரவள்ளி, மக்காச்சோளம், கம்பு, சோளம் போன்ற மானாவரி பயிா் செய்வோம்.

இந்தாண்டு ஆனி மாதத்தில் ஓரிரு தினங்கள் மழை பெய்ததோடு நின்று போனது. ஆடி மாதத்தில் எதிா்பாா்த்த அளவிற்கு இதுவரை மழை பெய்யவில்லை.

இதனால், நிலத்தில் பயிா்சாகுபடி செய்வதற்கு பருவமழையை எதிா்பாா்த்து காத்திருக்கிறோம். மழைக்காலம் நெருங்கியுள்ளதால், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், வேளாண்மைத் துறையின் கீழ் விவசாயிகளுக்கு அரசு மானிய விலையில் விதைகள், உரம் வழங்குவதற்கு முன்கூட்டியே தயாா்படுத்தி வைத்துக் கொண்டு தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றனா்.