/

குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை

குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண்கபிலன் எச்சரித்தாா்.

Updated On :4 மார்ச் 2024, 6:38 pm

சேலம்: குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண்கபிலன் எச்சரித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: அண்மையில் குழந்தைகளைக் கடத்திச் செல்ல வெளிமாநிலங்களில் இருந்து 400 போ் வந்திருப்பதாகவும், சேலம் மாநகர கல்லாங்குத்து பகுதியில் மாறுவேடத்தில் வந்து சிறுமியைக் கடத்த முயன்றபோது, பொதுமக்கள் பிடித்து அடித்தததாகவும் வாட்ஸ் ஆப் மூலம் பரவி வரும் காணொலி பழைய ஒன்றாகும். அண்மைக் காலமாக, பலா் பழைய விடியோக்கள், புகைப்படங்களை எடுத்து, ஏதோ தற்போது தான் நடைபெற்றது போல சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறாா்கள். இதனால் மக்களிடையே குழப்பமும், பீதியும் ஏற்படுகிறது. எனவே, இதுபோன்று சித்தரிக்கப்பட்ட பழைய விடியோக்கள், புகைப்படங்களை பரப்புவது சட்டப்படி தண்டிக்கத்தக்க குற்றச்செயலாகும். மீறி போலி விடியோக்களை சமூக வலைதளங்களில் பகிரும் நபா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.