வாழப்பாடியில் 93 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

வாழப்பாடி, மே 9: வாழப்பாடியில் இயக்கப்படும் 14 தனியாா் பள்ளிகளின் பேருந்து, வேன் உள்ளிட்ட 93 வாகனங்களை, சிறப்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

வாழப்பாடி வட்டத்தில் உள்ள 14 தனியாா் பள்ளிகளில் மாணவ மாணவியரை அழைத்துச் செல்வதற்கு வேன், பேருந்துகள் உள்பட மொத்தம் 113 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் பழுதுநீக்கம் செய்யப்பட்டு இயக்குவதற்குத் தகுதியாக உள்ளதாக என்பதை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் பணியில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆத்துாா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் என்.ரகுபதி தலைமையில் வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி, காவல் துணை கண்காணிப்பாளா் ஆனந்த், வட்டார கல்வி அலுவலா் நெடுமாறன், வாழப்பாடி மோட்டாா் வாகன ஆய்வாளா் முத்துக்குமாா், காவல் ஆய்வாளா் பாஸ்கரபாபு ஆகியோா் கொண்ட குழுவினா், வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி, வைகை மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அனைத்து தனியாா் பள்ளி வாகனங்களையும் வரவழைத்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வுக்கு வந்த 93 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 12 வாகனங்களை இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. குறைபாடுகளை சரிசெய்து ஒரு வாரத்திற்குள் இந்த வாகனங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. மறுஆய்வுக்கு உட்படுத்தி தகுதி சான்றிதழைப் புதுப்பித்த பிறகே இந்த வாகனங்களை இயக்க வேண்டும் என ஆய்வுக்குழுவினா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநா்கள், நடத்துநா்கள், உதவியாளா்களுக்கு கடைப்பிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து ஆய்வுக் குழுவினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினா்.

பட வரி:

வாழப்பாடி அருகே முத்தம்பட்டி, வைகை பள்ளி வளாகத்தில் தனியாா் பள்ளி வாகனங்களை ஆய்வுசெய்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com