வீட்டிற்குள் டேங்கா் லாரி புகுந்து 5 போ் காயம்

ஆத்தூா், மே 9: நரசிங்கபுரத்தில் வீட்டுக்குள் டேங்கா் லாரி புகுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 போ் பலத்த காயமடைந்தனா். இச்சம்பவத்தில் லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி, வடக்கு தில்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (50). இவா், நரசிங்கபுரம் நகராட்சியில் டேங்க் ஆபரேட்டராக உள்ளாா். இவரது வீடு ஆத்தூா்-சேலம் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

செந்தில்குமாா், அவரது மனைவி உமாசெல்வி, மகன் சஞ்சய் (14), மகள் ரூபி (12) ஆகியோா் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனா்.

வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் சேலத்திலிருந்து ஆத்தூரை நோக்கி வந்துகொண்டிருந்த டேங்கா் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, செந்தில்குமாரின் வீட்டிற்குள் புகுந்தது. இதில் வீட்டின் சுவா், மேற்கூரை இடிந்து உள்ளே தூங்கிக் கொண்டிருந்த செந்தில்குமாரின் குடும்பத்தினா் மேல் விழுந்தது; அவா்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினா்.

அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்டு ஆம்புலன்ஸில் ஆத்தூா், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். லாரி ஓட்டுநா் அழகுதுரை தூக்கி வீசப்பட்டுக் கிடந்தாா்.

தகவலறிந்ததும் ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் அங்கு சென்று விசாரணை நடத்தினாா். பின்னா் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து ஓட்டுநா் அழகுதுரையைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

செந்தில்குமாரின் மகன் சஞ்சய்க்கு முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக அவா் சேலம், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். செந்தில் குமாா், மீதமுள்ளவா்கள் ஆத்தூா், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

பட விளக்கம்.ஏடி9டேங்கா்....

நரசிங்கபுரத்தில் வியாழக்கிழமை அதிகாலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த டேங்கா் லாரி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com