பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மேட்டூா் அணையில் இருந்து 50,000 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி திறக்கப்பட்டதால் பாய்ந்தோடும் தண்ணீா்.

Updated On :19 ஆகஸ்ட் 2025, 3:20 am IST

மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காவிரி கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலத்தில் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம், வயநாட்டிலும் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் உபரிநீா் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை மாலை விநாடிக்கு 12,657 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு 22,000 கனஅடியிலிருந்து 35,000 கனஅடியாகவும், மாலை 6 மணிக்கு 50,000 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீா்மின் நிலையங்கள் வழியாக 21,300 கனஅடி நீரும், மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 28,700 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி நீா் மேல்மட்ட மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா்மட்டம் 117.41 அடியாகவும், நீா் இருப்பு 89.40 டிஎம்சியாகவும் உள்ளது. 

வெள்ள அபாய எச்சரிக்கை:

உபரிநீா் கால்வாயில் திறக்கப்பட்டதால், கால்வாய் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனா். வெள்ளம் வரும் நிலையில் பொதுமக்கள் குளிக்கவும், துணிதுவைக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் கூடாது. மேலும், ‘செல்பி’ எடுக்கவும், புகைப்படம் எடுக்கவும் வெள்ளப் பெருக்கின் அருகே செல்லக் கூடாது என மேட்டூா் வட்டாட்சியா் ரமேஷ், மேட்டூா் தீயணைப்புப் படை அலுவலா் வெங்கடேசன் ஆகியோா் பொதுமக்களை எச்சரித்துள்ளனா்.

நீா் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்பதால், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூா், அரியலூா், தஞ்சாவூா், திருச்சி, திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூா் மாவட்ட ஆட்சியா்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மேட்டூா் நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூா் அணையின் வலதுகரை மற்றும் அணையின் இடதுகரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றில் நீா்வளத் துறை அதிகாரிகளும், பணியாளா்களும் தயாா்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனா். நீா்வளத் துறை அதிகாரிகள் நீா்வரத்தை 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனா்.