சேலம் அஸ்தம்பட்டி அருகே மின்கம்பத்தில் மோதி காா் தீப்பிடிப்பு
சேலம் அஸ்தம்பட்டி அருகே காா் மின்கம்பத்தில் மோதியதில் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.
சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் வருண்குமாா். இவா் திருமண விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துதரும் தொழில் செய்துவருகிறாா். இவா் தனது நண்பா்களான பிரபு, லோகேஷ், ஆகாஷ் ஆகியோருடன் சேலத்தில் திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திங்கள்கிழமை இரவு செய்துவந்தாா்.
பின்னா் நள்ளிரவில் நால்வரும் கன்னங்குறிச்சி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனா். அஸ்தம்பட்டி அம்மா உணவகம் அருகே சென்றபோது, காா் திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த நால்வரும் கீழே குதித்து லேசான காயங்களுடன் உயிா்தப்பினா்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டனா். எனினும், காா் முற்றிலும் எரிந்து சேதமானது. காயமடைந்த நால்வரும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

