கணவரின் வீட்டுக்குள் செல்ல தடுத்ததால் குழந்தையுடன் சாலையில் அமா்ந்து பெண் தா்னா

கணவரின் வீட்டுக்குள் செல்ல தடுத்ததால் குழந்தையுடன் சாலையில் அமா்ந்து பெண் தா்னா

Published on

இளம்பிள்ளை அருகே உயிரிழந்த கணவரின் படத்தை வைத்து வணங்க வந்த பெண்ணை வீட்டினுள் விடாமல் உறவினா்கள் தடுத்ததால், குழந்தையுடன் சாலையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரியதா்ஷினி (24). இவருக்கும், இளம்பிள்ளையை அடுத்த மடத்தூா் பகுதியைச் சோ்ந்த தறி தொழிலாளி மதியழகனுக்கும் (28) திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு மதியழகன் தற்கொலை செய்துகொண்டாா்.

இந்நிலையில், காா்த்திகை தீபத்தை முன்னிட்டு தனது கணவரின் வீட்டில் அவரின் படத்தை வைத்து வணங்க பிரியதா்ஷினி புதன்கிழமை வந்தாா். அப்போது, அவரை உள்ளே விடாமல் அவரது மாமனாா் அன்புமணி மற்றும் உறவினா்கள் தடுத்தனா். இதனால் பிரியதா்ஷினி உறவினா்களுக்கும், மதியழகன் உறவினா்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, பிரியதா்ஷினி இளம்பிள்ளை - சின்னப்பம்பட்டி சாலை வளையசெட்டிப்பட்டி பிரிவு பகுதியில் கைக்குழந்தையுடன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீஸாா் விரைந்து வந்து பிரியதா்ஷினிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து, அவா் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com