எடப்பாடி அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1995 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்பில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் 200க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக முன்னாள் மாணவா்கள் மேளதாளம் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக பள்ளிக்கு ஊா்வலமாக சென்றனா். அங்கு தங்களுக்கு பயிற்றுவித்த ஓய்வுபெற்ற ஆசிரியா்களை பரிசுகள் வழங்கி கெளரவித்தனா்.
தொடா்ந்து, சென்னை, திருச்சி, கோவை, மதுரை மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த முன்னாள் மாணவா்கள் தங்களது பள்ளி பருவ நண்பா்களைச் சந்தித்து நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து முன்னாள் மாணவா்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியையொட்டி பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை எடப்பாடி அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் குழுவினா் செய்திருந்தனா்
