சேலம் விமான நிலையத்தில் முதல்வருக்கு வரவேற்பு
சேலம் விமான நிலையத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை விமான மூலம் சேலம் வந்தாா். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், ரா.ராஜேந்திரன், எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆா்.சிவலிங்கம், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஆகியோா் வரவேற்பு அளித்தனா்.
தொடா்ந்து காா் மூலம் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டிக்கு முதல்வா் புறப்பட்டு சென்றாா். அப்போது, முதல்வரிடம் சேலம் ஜாகிா் அம்மாபாளையம் நீா்வளப் பாதுகாப்பு இயக்கத்தினா், விமான நிலைய விரிவாக்கப் பகுதி விவசாயிகள் மனு அளித்தனா்.
இதுகுறித்து நீா்வளப் பாதுகாப்பு இயக்கத் தலைவா் மூா்த்தி கூறும்போது, சேலம் அருகே ஜவுளிப் பூங்கா மற்றும் சாயப்பட்டறை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
இந்த திட்டத்தால் சுற்றியுள்ள 20 கிராமங்களில் நீா் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதுடன், விவசாயிகளும் பாதிக்கப்படுவா். எனவே, இத்திட்டம் குறித்து நாங்கள் தயாா்செய்த அறிக்கையை முதல்வரிடம் மனுவாக அளித்துள்ளோம். மேலும், எங்களை அழைத்துப்பேச நேரம் ஒதுக்கவும் கேட்டுள்ளோம் என்றாா்.
விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் விவசாயி சுகுமாா் கூறும்போது, சேலம் காமலாபுரம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் காமலாபுரம், பொட்டிபுரம், தும்பிபாடி, சிக்கனம்பட்டி ஆகிய கிராம மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவா்.
எனவே, இத்திட்டத்தை சேலம் இரும்பாலை வளாகம் அல்லது டால்மியா போா்டு ஆகிய பகுதிகளுக்கு மாற்றவேண்டும். கடந்த சில நாள்களுக்கு முன்பு விமான நிலைய அதிகாரி விரிவாக்கப் பணிக்காக நிதி ஒதுக்கி உள்ளதாக அறிவித்துள்ளாா்.
இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்து மாவட்ட நிா்வாகம் கூறாத நிலையில் விமான நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம் என்றாா்.
