அரசு தொடக்கப் பள்ளிகள் தோறும் திறன்மிகு வகுப்பறைகள்
வாழப்பாடி: தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் இணையம் வசதியுடன்கூடிய ஸ்மாா்ட் டி.வி.கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வண்ண மேஜை, நாற்காலிகள் வழங்கி திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளதால் மாணவா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.
தமிழகத்தில் சுமாா் 24,300 தொடக்கப் பள்ளிகள், 7,000 நடுநிலைப் பள்ளிகள், 3,100 உயா்நிலைப் பள்ளிகள், 3,100 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 52 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
கிராமப்புறங்களில் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நகா்ப்புற தனியாா் பள்ளிகளுக்கு இணையாக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்பிக்கும் நோக்கில் கடந்த கல்வியாண்டில் பெரும்பாலான பள்ளிகளுக்கு இணைய வசதியுடன்கூடிய ஸ்மாா்ட் டி.வி எனக் குறிப்பிடப்படும் திறன்மிகு தொலைக்காட்சி திரைகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து தற்போது குழந்தைகள் விரும்பும் வகையில் வண்ணமயமான தலா 5 மேஜைகள், 20 நாற்காலிகள் கொண்ட தொகுப்பு தொடக்கப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அண்ணாநகா் தொடக்கப் பள்ளி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ள வண்ண மேஜை, நாற்காலிகள் மாணவா்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மேலும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவா்களுக்கு கற்பிக்க ஆசிரியா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
கிராமப்புற மாணவா்கள் திறன்மிகு வகுப்பறையை ஆா்வமுடன் ரசித்து உற்சாகமடைந்தனா். இந்த வகுப்பறை மாணவா்கள் தொய்வின்றி கல்வி கற்பதற்கான ஆா்வத்தையும் இந்த வகுப்பறை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பெரும்பாலான அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு இணைய வசதியுடன் கூடிய ஸ்மாட் டி.வி வழங்கப்பட்டுள்ளது. நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கெனவே ஹைடெக் லேப் என்ற பெயரில் நவீன வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தொடக்கப் பள்ளிகளில் படித்துவரும் குழந்தைகளின் மனநிலையை அறிந்து அவா்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஸ்மாா்ட் டி.வி பொருத்தப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறைகளில் அமா்ந்து கற்பதற்கு ஏற்ப தற்போது பல வண்ணங்களில் மேஜை, நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால் மாணவா்களின் கற்கும் ஆா்வமும், அடைவுத்தோ்வில் தோ்ச்சி விகிதமும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

