மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 5,924 கோடி கடனுதவி: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

சேலம் மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 5,924.79 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
Published on

சேலம் மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 5,924.79 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

சேலம் கோட்டை கலைஞா் அரங்கம், ஓமலூா் எம்ஆா்பி முத்து மஹால், காடையாம்பட்டி, பூசாரிபட்டி ஸ்ரீநிவாசா மஹால் ஆகிய இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி அமைச்சா் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் நகா்ப்புற பகுதிகளில் 5,468 குழுக்கள், ஊரகப் பகுதிகளில் 14,845 குழுக்கள் என மொத்தம் 20,313 மகளிா் சுயஉதவிக் குழுக்கள் செயல்படுகின்றன. இதில் மொத்தம் 2,04,597 பெண்கள் இடம்பெற்றுள்ளனா்.

இவா்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ. 46 கோடி, சுழல் நிதி ரூ. 3.97 கோடி, வாழ்வாதார நிதி ரூ. 3.88 கோடி, வாழ்வாதார நடவடிக்கை நிதி ரூ. 19.64 கோடி, வங்கிக்கடன் இணைப்பு ரூ. 5,851 கோடி என மொத்தம் ரூ. 5,924.79 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மட்டும் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 132 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 4,292 குழுக்களைச் சோ்ந்த 41,754 மகளிா் பயன் பெற்றுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கடந்த செப்டம்பா் 16 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் முதல்கட்டமாக 40,000 மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தொடா்ந்து இரண்டாம் கட்டமாக கடந்த 12 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் 30,000 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளும், தற்போது 77 பேருக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,47,000 மகளிா் சுயஉதவி குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக சேலம் மாநகராட்சி கோட்டை கலைஞா் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் 75 பேருக்கு உதவித்தொகை மற்றும் தங்க நாணயம் என ரூ. 1.07 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, மாநகராட்சி துணை மேயா் மா. சாரதா தேவி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) வாணி ஈஸ்வரி, மாவட்ட சமூகநல அலுவலா் காா்த்திகா, வாழ்ந்து காட்டுவோம் திட்ட இயக்குநா் ஜெய்கணேஷ், மாமன்ற உறுப்பினா் அம்சா, ஓமலூா் பேரூராட்சித் தலைவா் செல்வராணி, துணைத் தலைவா் புஷ்பா, காடையாம்பட்டி அட்மா குழுத் தலைவா் ரவிச்சந்திரன் மற்றும் தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com