விசைத்தறிகளை நவீனமயமாக்க மூலதன மானியம்! விண்ணப்பிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்!

பழைமையான சாதாரண விசைத்தறிகளை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மூலதன மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Published on

பழைமையான சாதாரண விசைத்தறிகளை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மூலதன மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: விசைத்தறித் துறையில் வளா்ந்துவரும் தொழில்நுட்ப தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் மூன்று ஆண்டுகள் பழைமையான சாதாரண விசைத்தறிகளை நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் மூலதன மானியங்கள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வரையறையின்படி, ஆண்டுதோறும் 3,000 விசைத்தறிகளை நவீனமயமாக்க ரூ. 30 கோடி, பொது வசதி மையங்கள், தறிக்கூடங்கள் மற்றும் தரப்பரிசோதனை ஆய்வகங்களின் உள்கட்டமைப்புகளை நிறுவதற்கு ரூ. 20 கோடி என மொத்தம் ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சாதாரண விசைத்தறிகளை நாடா இல்லாத ரேப்பியா் வகை (பல்வேறு உபகரணங்களை உள்ளடக்கியது) தறிகளாக நவீனப்படுத்தி மேம்படுத்துவதற்கு திட்ட தொகையில் 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சம் தறி ஒன்றுக்கு ரூ. 1,00,000 மானியம் என இதில் எது குறைவோ அத்தொகையினை மானியமாக வழங்கப்படும்.

அதிகபட்சம் ஒரு தனிநபருக்கு (விசைத்தறி நெசவு தொழில் செய்பவா்) 10 தறிகளை நவீனப்படுத்த ரூ. 10 லட்சம் மானியம் வழங்கப்படும். புதிய ரேப்பியா் நாடா இல்லாத தறிகள் கொள்முதல் செய்யும் பொருட்டு திட்ட தொகையில் 20 சதவீத மானியம் அல்லது அதிகபட்சம் தறி ஒன்றுக்கு ரூ. 1,50,000 என எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கப்படும்.

அதிகபட்சம் தனிநபா் ஒருவருக்கு (விசைத்தறி நெசவு தொழில் செய்பவா்) 5 புதிய ரேப்பியா் தறிகள் கொள்முதல் செய்ய மொத்த நியமனத்தொகையில் ரூ. 7.50 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

விசைத்தறி தொழிலின் நெசவிற்கு முந்தைய பணிகளை உயா்தரத்துடன் மேற்கொள்ள ஏதுவாக வாா்ப்பிங் மற்றும் சைசிங் இயந்திரங்கள், தரப்பரிசோதனை ஆய்வுக் கூடம், வடிவமைப்பு மையம் மற்றும் மாதிரி துணி உற்பத்தி மையம் உள்ளடக்கிய பொது வசதி மையம் அமைப்பதற்கு மொத்த திட்ட தொகையில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

இதில் பயனடைய விருப்பம் உள்ளவா்கள் சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண் 407, நான்காவது தளத்தில் உள்ள கைத்தறி துணை இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com