தும்பல் - ஏத்தாப்பூா் சாலை வளைவில் நிகழும் விபத்துகள்: வேகத்தடை அமைக்க கோரிக்கை

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூா்-தும்பல் சாலையில் கல்யாணகிரி புதுசாலை அருகிலுள்ள அபாயகரமான வளைவில் அடிக்கடி சாலை விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதை தவிா்க்க வேகத்தடை அமைக்க கோரிக்கை
Published on

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூா்-தும்பல் சாலையில் கல்யாணகிரி புதுசாலை அருகிலுள்ள அபாயகரமான வளைவில் அடிக்கடி சாலை விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதை தவிா்க்க வேகத்தடை அமைக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏத்தாப்பூரில் இருந்து கல்லேரிப்பட்டி, கல்யாணகிரி, குமாரபாளையம், பனைமடல், இடையப்பட்டி, தும்பல் வழியாக கல்வராயன் மலை கருமந்துறை செல்லும் பிரதான நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக ஆத்தூா், தம்மம்பட்டி பகுதியில் இருந்து கல்வராயன் மலை கருமந்துறை, கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை, தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி, திருவண்ணாமலை பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதனால், ஏத்தாப்பூா்- தும்பல் சாலை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்குவதால் நாளுக்குநாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இச்சாலையில், கல்யாணகிரி அரசமரத்து பேருந்து நிறுத்தம் அருகிலும், புதுசாலை பேருந்து நிறுத்தம் வாழப்பாடியாா் தோட்டம் அருகிலும் அபாயகரமான வளைவுகள் உள்ளன.

இந்த வளைவுகளில் வேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதனால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை புதுசாலை வளைவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாண்டானூரைச் சோ்ந்த ராஜா (55) நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவருடன் சென்ற சிவச்சந்திரன் படுகாயமடைந்தாா். இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இப்பகுதியில் வேகத்தடைகள் அமைக்க வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com