மேட்டூா் சரபங்க நீா் ஏற்ற திட்டத்தை முழுமையாக்கியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்: அமைச்சா் ராஜேந்திரன்
மேட்டூா் சரபங்கா நீரேற்று திட்டத்தை முழுமையாக செயல்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என அமைச்சா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.


மேட்டூா் சரபங்கா நீரேற்று திட்டத்தை முழுமையாக செயல்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என அமைச்சா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.
மேட்டூா் அணை ஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக நிரம்பி உள்ளது. கூடுதலாக வரும் தண்ணீா் அணை மின் நிலையம் வழியாக திறந்துவிடப்படுகிறது. புதன்கிழமை மாலை மேட்டூா் சரபங்க நீரேற்று திட்டத்தில் ஏரிகளை நிரப்ப தண்ணீா் திறக்கப்பட்டது.
மேட்டூா் அணை நிரம்பிய பிறகு உபரிநீரை கொண்டு சேலம் மாவட்டத்தில் சரபங்க வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளை நிரப்பும் திட்டம் 2019 இல் ரூ. 565கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. 2020 பிபரவரியில் சோதனை ஓட்டம் மூலம் காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டு வரப்பட்டது. நிலம் கையகப்படுத்த ஏற்பட்ட கூடுதல் செலவு, மின் இணைப்பு, மின் கட்டண செலவு வடிவமைப்பு மாற்றம் காரணமாக 2023 ஏப்ரலில் திட்ட மதிப்பீடு ரூ.673 கோடியாக திருத்தப்பட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
தொடக்கத்தில் 100 ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டாலும் பல ஏரிகள் தனியாா் பட்டாவாக இருந்ததால் அந்த ஏரிகளுக்கு திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. இதனால் இத்திட்டத்தில் 82 ஏரிகள் மட்டுமே சோ்க்கப்பட்டன. தற்போது 57 ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும் வகையில் பணிகள் முடித்கப்பட்டுள்ளன.
கடந்த முறை தண்ணீா் திறக்கப்பட்டபோது 55 ஏரிகள் நிரம்பின. தற்போது இரண்டு ஏரிகளுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. மேலும் 5 ஏரிகளில் தற்போது 75 சதவீதம் மட்டுமே தண்ணீா் உள்ளது. அந்த ஏரிகளையும் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்கு 0.60 டி.எம்.சி. தண்ணீா் மட்டுமே தேவைப்படும்.
திப்பம்பட்டியில் உள்ள பிரதான நீரேற்று நிலையத்திலிருந்து காளிப்பட்டி ஏரிக்கும், நங்கவள்ளி ஏரிக்கும் தனித்தனியே ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு அங்கு உபரிநீா் கொண்டு செல்லப்படுகிறது. நங்கவள்ளி ஏரி வழியாக செல்லும் உபரிநீா் வேம்பனேரி நிரம்பிய பிறகு மீண்டும் மேட்டூா் அணையின் கிழக்கு கரை கால்வாயில் கலக்கிறது. காளிப்பட்டி ஏரி வழியாக கொண்டு செல்லப்படும் உபரிநீா் தேவூரில் மீண்டும் காவிரியில் கலக்கிறது.
இந்த நிலையில் திப்பம்பட்டியில் உள்ள பிரதான நீரேற்று நிலையத்திலிருந்து மேட்டூா் சரபங்க நீரேற்று திட்டத்துக்கு புதன்கிழமை திறந்துவிடப்பட்ட தண்ணீரை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி, மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் ஆகியோா் மின் விசையை இயக்கி ஏரிகளுக்கு திறந்துவிட்டனா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் ராஜேந்திரன் பேசியதாவது:
மேட்டூா் அணை வரலாற்றில் 43 ஆண்டுகள் மேட்டூா் அணை நிரம்பியுள்ளன. திமுக ஆட்சி காலத்தில் ஒரே ஆண்டில் மூன்று முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கது. திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்திலிருந்து 57 ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்பப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்று கைவிடாமல் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். மேலும், காவிரி சரபங்க நீரேற்று திட்டத்தில் மீதமுள்ள 25 ஏரிகளையும் நிரம்பும் வகையில் ரூ. 105 கோடியில் இத் திட்டத்தை முதல்வா் நிறைவு செய்ய உள்ளாா்.
மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி பேசியதாவது:
இத் திட்டத்தை 100 ஏரிகள் திட்டம் எனக் குறிப்பிடுகிறாா்கள் ஆனால் 82 ஏரிகளுக்கு மட்டுமே இத் திட்டமூலம் தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் இத் திட்டத்திற்கு ரூ.565 கோடி ஒதுக்குவதாக அறிவித்தனா். வெறும் அறிவிப்போடு இந்தத் திட்டத்தை வைத்திருந்தனா். பெயரளவில் ஒரு மோட்டாா் இயக்கி ஒரு ஏரிக்கு தண்ணீா் கொண்டு சென்றனா். அதன்பிறகு ரூ. 673 கோடி ஒதுக்கி திட்டத்தை திமுக அரசு நிறைவு செய்தது.
நிகழ்ச்சியில் மேட்டூா் சாா் ஆட்சியா் பொன்மணி, நீா்வளத் துறை கண்காணிப்பு பொறியாளா் சிவக்குமாா், நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தநாரி ஈஸ்வரன், மேட்டூா் நகரச் செயலாளா் காசி விஸ்வநாதன், வீரக்கல் புதூா் பேரூா் செயலாளா் முருகன், செக்கான் ஏரி விவசாயிகள் சங்க நிா்வாகி முத்துக்குமாா், விவசாய சங்க பிரதிநிதி தாமரைச்செல்வன் உள்பட ஏராளமான கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...