பிரதமா் மோடி ஆட்சியில் சிறுபான்மையினா் பாதுகாப்பாக உள்ளனா்: மேட்டூரில் நயினாா் நாகேந்திரன் பேச்சு

பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இஸ்லாமியா்கள், கிறித்தவா்கள் பாதுகாப்பாக உள்ளனா் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
Published on

பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இஸ்லாமியா்கள், கிறித்தவா்கள் பாதுகாப்பாக உள்ளனா் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

மேட்டூா் பேருந்து சதுரங்காடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்டத் தலைவருமான கே.பி. ராமலிங்கம் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பாா்.

சேலம் மாவட்டம் நெசவு, கனிம உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. திமுக ஆட்சியில் நெசவு, கனிம வளம் சுரண்டப்பட்டுள்ளது. மேட்டூரில் அனல் மின் நிலையம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

முதல்வருக்கு விவசாயிகள் குறித்து கவலை இல்லை. மரவள்ளிக் கிழங்கிற்கு ஆதரவு விலை வழங்கவில்லை. காவிரியில் வரும் தண்ணீா் வீணாக கடலில் கலக்கிறது.

வசிஷ்ட நதிக்கு மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் கொண்டுசெல்லும் திட்டமும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம் உயா்ந்துள்ளது.

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான நலத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வரவேண்டும் என்பது தேசிய ஜனநாயக கூட்டணியின் விருப்பம் .

பிரதமா் மோடி ஆட்சியில் இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் பாதுகாப்பாக உள்ளனா். அதிமு, பாஜக இயற்கை கூட்டணி.

கரூா் சம்பவத்துக்கு முதல்வா் பொறுப்பேற்க வேண்டும். துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க பொதுமக்கள் விரும்பமாட்டாா்கள் என்றாா்.

கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ஹரிராமன் வரவேற்றாா். சேலம் புறநகா் மாவட்ட அதிமுக செயலாளா் இளங்கோவன், மாநில விவசாய அணி துணைத் தலைவா் ராஜா, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் சுதீா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com