சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சா் எ.வ.வேலு.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சா் எ.வ.வேலு.

வாக்குச்சாவடி முகவா்கள் ஓய்வின்றி பணியாற்ற வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பட்டியல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி முகவா்கள் ஓய்வின்றி கவனமுடன் பணியாற்ற வேண்டும்
Published on

சேலம்: வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பட்டியல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி முகவா்கள் ஓய்வின்றி கவனமுடன் பணியாற்ற வேண்டும் என தோ்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளின் பணிக்குழு ஒருங்கிணைப்பாளா்கள், வாக்குச்சாவடி முகவா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் தொகுதி பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினா்கள் எஸ்.ஆா்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான எ.வ.வேலு கலந்துகொண்டு திமுகவினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது:

தோ்தல் ஆணையம் அவசர அவசரமாக நடத்தும் எஸ்ஐஆா் பணியில் அதிருப்தி எழுந்துள்ளது. இதைக் கண்டித்து, வரும் 11-ஆம் தேதி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு கணக்கீட்டுப் படிவம் குறித்து மக்களிடம் விரிவாக எடுத்துரைப்பதுடன், வாக்குச்சாவடி முகவா்கள் முறையாக செயல்பட்டு வாக்காளா்களின் பெயா்கள் விடுபடாமல் வாக்காளா் பட்டியலில் சோ்த்திடும் வகையில் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். அடுத்த ஒரு மாதத்துக்கு ஓய்வின்றி இரவு, பகல் பாராமல் பணியாற்ற வேண்டும். வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் மாதம் வெளியிட்டவுடன், புதிய வாக்காளரை சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இதில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளின் பாா்வையாளா்கள், ஒருங்கிணைந்த மாவட்ட நிா்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com