சாலையோத்தில் கொட்டப்படும் பாக்குத்தோல்: தீவைப்பதால் சுகாதாரச் சீா்கேடு
சேலம் மாவட்டம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையத்தில் கொட்டைப் பாக்குகளை உரித்து, அதன் தோலை நீா்நிலைகள், சாலையோரத்தில் கொட்டி தீவைப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
வாழப்பாடி, பேளூா், அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், நரசிங்கபுரம், தம்மம்பட்டி பகுதியில் விளையும் பாக்குக் காய்களை அறுவடைசெய்து பதப்படுத்தி ‘ஆப்பி’ எனக் குறிப்பிடப்படும் ‘கொட்டைப்பாக்கு’ உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் வாசனைப் பாக்கு தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமின்றி மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பிகாா், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் பாக்கு பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது. அண்மைக்காலமாக பெயிண்ட் தயாரிக்கும் நிறுவனங்களும் கொட்டைப்பாக்கு அனுப்பப்படுகிறது.
வாழப்பாடி, சிங்கிபுரம், சோமம்பட்டி, கொட்டவாடி, பேளூா் கரடிப்பட்டி, குறிச்சி, பொன்னாரம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சின்னமசமுத்திரம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாக்குக் காய்களை உரித்து, கொட்டைப் பாக்குகளைப் பிரித்தெடுக்கும் வியாபாரிகள், தொழிலாளா்கள் அதன் மேல்புறத் தோலை ஆறு, ஓடை, குளம், குட்டை, ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகள் மற்றும் மயானம் உள்ளிட்ட பொதுஇடங்கள், சாலையோரங்களில் கொட்டுகின்றனா்.
இதனால், சாலையில் எங்குபாா்த்தாலும் குவியல் குவியலாக பாக்குத் தோல்கள் குப்பைகள் குவிந்துள்ளன. இந்த பாக்குத்தோல் குவியல்களில் இருந்து துா்நாற்றம் வீசுகிறது. மேலும், பாக்குத்தோல் குவியலுக்கு தீவைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
இதனால், இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சாலையோரத்தில் பாக்குத்தோல் குவியலுக்கு தீ வைக்கப்படுவதால் ஏற்படும் புகை மூட்டத்தால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.
மேலும், சாலையோரங்கள் மற்றும் நீா்நிலைகளில் இத்தோல்களை கொட்டி தீ வைப்பதால் அருகே உள்ள மரங்களும் தீயில் கருகிவருகின்றன.
வாழப்பாடி, பேளூா், பெத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம், தம்மம்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இப்பிரச்னை இன்றளவும் தீா்க்கமுடியாமல் உள்ளது. இப்பிரச்னைக்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சக்திவேல் கூறியதாவது: கொட்டைப்பாக்கு உற்பத்தி செய்யும் விவசாயிகள், வியாபாரிகள் பாக்குத்தோலை நீா்நிலைகள், சாலையோரம் உள்ளிட்ட பொது இடங்களில் கொட்டுவது வாடிக்கையாகிவிட்டது.
இதற்குத் தீ வைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு சுகாதாரச் சீா்கேடும் ஏற்படுகிறது. தேங்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மட்டையில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கப்படுவதைப் போல பாக்குத்தோலையும் பதப்படுத்தி அரைத்து தூளாக்கி சாம்பிராணி, கொசுவிரட்டிகள், கலப்பு உரம், பேக்கரி அடுப்புகளுக்கு எரிபொருளாக பயன்படுத்த முடியும்.
பாக்குத்தோல் நாரையும் பிரித்தெடுத்து இன்னும்பிற மதிப்புக்கூட்டுப் பொருள்களை தயாரித்து விற்பனை செய்வதற்கும் வாய்ப்புள்ளது.
இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண கிராமங்கள்தோறும் பாக்குத் தொழில் செய்துவரும் விவசாயிகள், வியாபாரிகளுக்கு தோட்டக்கலைத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் பயிற்சி அளிக்க முன்வர வேண்டும். மேலும், இதுதொடா்பாக குழு அமைக்கப்பட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பாக்குத்தோல் குவியலை சாலையோரங்களில் கொட்டுவதைத் தடுக்கவும், பாக்குத்தோலைப் பதப்படுத்தி பயன்படுத்துவதற்கும் அந்தந்த பகுதி வட்டார வளா்ச்சி அலுவலா்களும், ஊராட்சி நிா்வாகமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய சேலம் ஆட்சியா் செ.காா்மேகம் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, சிங்கிபுரம், பொன்னாரம்பட்டி மற்றும் குறிச்சி ஊராட்சிகளில் பாக்குத்தோலை சாலையில் கொட்டாமல் அதை மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், பிறகு இந்த முன்னெடுப்பு கிடப்பில் போடப்பட்டது. தற்போது, மாவட்ட நிா்வாகம் இப்பிரச்சனைக்கு தீா்வுகாண முனைப்புகாட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

