சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பணியாளா்களுக்கு கேடயம் வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன்.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பணியாளா்களுக்கு கேடயம் வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன்.

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ. 21,856 கோடி கடனுதவி

கடந்த நான்கரை ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்களில் 20 வகையான கடன்களின் வாயிலாக சேலம் மாவட்டத்தில் ரூ. 21,856 கோடி கடனுதவி
Published on

சேலம்: கடந்த நான்கரை ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்களில் 20 வகையான கடன்களின் வாயிலாக சேலம் மாவட்டத்தில் ரூ. 21,856 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.

72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 2,593 பயனாளிகளுக்கு ரூ. 20.08 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் பேசியதாவது:

கடந்த நான்கரை ஆண்டுகளில் சேலம் மாவட்டத்துக்கு மட்டும் ரூ. 5,052 கோடி கடனுதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று சேலம் மாவட்டத்தில் ரூ. 835 கோடி பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டு, கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் ரூ. 483 கோடி தள்ளுபடி, மகளிா் சுயஉதவிக் குழுக்களில் ரூ. 132 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள பொது விநியோகத் திட்டத்தில் 11,11,370 குடும்ப அட்டைதாரா்களுக்கு 21,642 மெட்ரிக் டன் அளவிலான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, கடந்த நான்கரை ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 20 வகையான கடன்களின் வாயிலாக ரூ. 21,856 கோடி அளவில் மொத்தமாக கடன் வழங்கப்பட்டுள்ளது.

தாயுமானவா் திட்டம் மூலம் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப் பொருள்களை அவா்களின் இல்லத்துக்கே சென்று வழங்கும் திட்டத்தில், சேலம் மாவட்டத்தில் 1,10,375 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வருகின்றனா். அதேபோன்று, 32 முதல்வா் மருந்தகங்கள், கூட்டுறவு மருந்தகங்கள் என பல்வேறு கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்பட்டு ஏறத்தாழ ரூ. 25 கோடி அளவில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியின் வாயிலாக பயிா்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன், மத்தியக் காலக் கடன், மகளிா் சுயஉதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், வீட்டுவசதி கடன், மகளிா் சிறுவணிகக் கடன் மற்றும் வீடு அடமானக் கடன் என 2,593 பயனாளிகளுக்கு ரூ. 20.08 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

தொடா்ந்து, ரூ. 3.55 கோடியில் 6 வேளாண் சேவைக் கட்டடங்கள், 3 அலுவலகக் கட்டடம், 4 அலுவலகக் கட்டடங்கள் நவீனமயமாக்கல் பணி நிறைவுபெற்ற திட்டப் பணிகளை திறந்துவைத்தும், மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டுக் கேடயங்களும் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் அமைச்சா் வழங்கினாா்.

விழாவில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினா் தே.மலையரசன், மேயா் ஆ.ராமச்சந்திரன், மேற்கு தொகுதி எம்எல்ஏ ரா.அருள், மேட்டூா் எம்எல்ஏ எஸ்.சதாசிவம், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளா்/மேலாண்மை இயக்குநா் குழந்தைவேலு, சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com