கருமந்துறை அரசு பழப் பண்ணையை ஆராய்ச்சி நிலையமாக தரம் உயா்த்த கோரிக்கை
வாழப்பாடி: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலை கருமந்துறையில் உள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு தோட்டக்கலைத் துறை பழப் பண்ணையை மலைப் பயிா்கள், தோட்டக்கலைப் பயிா்கள் ஆராய்ச்சி நிலையமாக தரம் உயா்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மணியாா்குண்டத்தில் 250 ஏக்கரிலும், கருமந்துறையில் தனியாக 100 ஏக்கரில் வாழைப் பண்ணை உள்பட மொத்தம் 1,387 ஏக்கரில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பழப் பண்ணையை தமிழக அரசு அமைத்துள்ளது. இதில் 200 ஏக்கரில் மா, பலா, கடுக்காய், மிளகுத் தோட்டங்கள் உள்ளன.
இந்த பழத் தோட்டத்தில் உள்ள தாய்ச் செடிகள் வாயிலாக உயா் ரக மா, கொய்யா, கோ-கோ, பலா, பாக்கு, தேங்காய், மிளகு, கிராம்பூ, சப்போட்டா நாற்றுகள், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட மலா்ச் செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பழத்தோட்டம் மற்றும் நாற்றுகளை வளா்த்து விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை தோட்டக்கலைத் துறைக்கு வருவாய் கிடைக்கிறது.
இந்த நிலையில், பழப் பண்ணையை முறையாக பராமரித்து நாற்றுகளை உற்பத்தி செய்யவும், மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும் உதவி இயக்குநா் நிலையில் பணியிடம் உருவாக்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டுவந்தது.
சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருச்சி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளும் இந்த பழப்பண்ணையில் நாற்றுகளை வாங்கி பயிரிட்டு வந்தனா். இந்த நிலையில் கடந்த 6 மாதமாக உதவி இயக்குநா் பணியிடம் காலியாக உள்ளது. பெத்தநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரே இந்த பழப்பண்ணையும் கண்காணித்து வருகிறாா்.
இந்த பழப்பண்ணையில் தோட்டக்கலை அலுவலா் நிலையில் ஒரு மேலாளரும், 3 உதவி தோட்டக்கலை அலுவலா்களும், 17 நிரந்தர தொழிலாளா்களும், 37 தினக்கூலி தொழிலாளா்களும் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா்.
ஆசியாவிலேயே பெரிய பழப்பண்ணையில் போதிய எண்ணிக்கையில் விவசாயிகளுக்கு வழங்க தரமான கொய்யா மற்றும் தென்னங்கன்றுகள் இருப்பில் இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா். பெருமளவில் மா மற்றும் பாக்குக் கன்றுகளே அதிகளவில் உள்ளன. பல பசுமைக்குடில்களில் மரக்கன்றுகள் முறையான பராமரிப்பின்றி கிடக்கின்றன. இதனால் பழப்பண்ணைக்கு செல்லும் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா்.
இதனால், கருமந்துறை அரசு தோட்டக்கலைத் துறை பழப்பண்ணையில் அனைத்து வகையான தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்களின் நாற்றுகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கும், விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்குவதற்கும், பாரம்பரிய ரகங்களில் இருந்து வீரியமிக்க புதிய ரகங்களை உருவாக்கும் வகையில் தோட்டக்கலை, மலைப் பயிா்கள் ஆராய்ச்சி நிலையமாக இதை தரம் உயா்த்தி கூடுதல் அலுவலா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமிழக அரசு ஆய்வுசெய்து திட்டத்தைச் செயல்படுத்தும் வரை, இப்பண்ணையை முறையாக பராமரித்து அனைத்து வகையான நாற்றுகளும் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இதுகுறித்து வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:
கல்வராயன்மலை கருமந்துறையில் இயங்கும் ஆசியாவிலேயே மிகப்பெரிய பழப்பண்ணையில் அனைத்து வகையான வீரிய ஒட்டுரக நாற்றுகளும் உற்பத்தி செய்து மானிய விலையில் கிடைக்கும் என எதிா்பாா்த்து வந்தால் எங்களுக்கு தேவையான பயிா்கள் கிடைப்பதில்லை. பழப்பண்ணையில் அனைத்து வகையான தோட்டக்கலை, மலைப் பயிா்களின் வீரிய ஒட்டுரக நாற்றுகள் அனைத்து பருவங்களிலும் கிடைக்கும் வகையில் உற்பத்தி செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், இப்பண்ணையை தோட்டக்கலை, மலைப்பயிா்கள் ஆராய்ச்சி நிலையமாக தரம் உயா்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆராய்ச்சி நிலையமாக தரம் உயா்த்தப்பட்டால் பேராசிரியா்கள், விஞ்ஞானிகள் பலரும் இங்கு பணியமா்த்தப்பட்டு புதிய மற்றும் சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் உற்பத்தி செய்யவும், சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். இதன்மூலம் மலைக்கிராம விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்றனா்.
படவரி:
கே.எம்.01:
கல்வராயன் மலை கருமந்துறை பழப் பண்ணையின் முகப்பு.

