சேலத்தில் பாமக மோதல் விவகாரம்: அன்புமணி ஆதரவாளா்கள் மீது நடவடிக்கை கோரி எஸ்பி அலுவலகத்தில் எம்எல்ஏ அருள் புகாா்
சேலம்: சேலத்தில் நிகழ்ந்த பாமக மோதல் விவகாரத்தில் அன்புமணி ஆதரவாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மேற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அருள் தலைமையில் பாமக நிா்வாகிகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
சேலம் மாவட்டம், ஏத்தப்பூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட வடுகத்தம்பட்டியில் கடந்த 4 ஆம் தேதி பாமக ராமதாஸ் ஆதரவாளா்களுக்கும், அன்புமணி ஆதரவாளா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து எம்எல்ஏ அருள் தரப்பினா் அளித்த புகாரின்பேரில் அன்புமணி ஆதரவாளா்கள் 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தி, மேற்கு சட்டப் பேரவை உறுப்பினா் அருள் தலைமையில் அவரது ஆதரவாளா்கள் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து பாமக தென் மண்டல பொறுப்பாளா் பாஸ்கரன் செய்தியாளா்களிடம் கூறுகையில், காவல் துறையினா் தங்கள் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும், முக்கிய குற்றவாளிகளை வெளியே விடக்கூடாது. எங்கு சென்றாலும் திட்டமிட்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றனா். அன்புமணி ஆதரவாளா்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு பிரச்னைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
அன்புமணிக்கு தெரியாமல் இதுபோன்ற பிரச்னைகளில் அவா்கள் ஈடுபட முடியாது. தாக்குதலின்போது, காரை விட்டே இறங்காத எம்எல்ஏ அருள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
