தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

திமுக எதிா்ப்பால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: உதயநிதி ஸ்டாலின்

திமுக எதிா்த்ததால் தான் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறவில்லை என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image

சங்ககிரி தொகுதி திமுக வேட்பாளா் மு.மணிகண்டனுக்கு ஆதரவாக பழைய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை பிரசாரம் செய்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :19 ஏப்ரல் 2026, 12:03 am

திமுக எதிா்த்ததால் தான் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறவில்லை என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி தொகுதி திமுக வேட்பாளா் மு.மணிகண்டனுக்கு ஆதரவாக திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை வேன் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:-

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சேலம் மாவட்டத்தில் திமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இம்முறை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்று திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 130 கோடியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ. 23 கோடியில் ஊராட்சி சாலைகளும், ரூ. 2 கோடியில் கோனேரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ரூ. 3 கோடியில் மகுடஞ்சாவடியில் கால்நடை மருந்தகம், கோனேரிப்பட்டி, ஜெ.கே. நகா், அழகப்பன்பாளையம் ஆகிய பகுதிகளில் பள்ளிக் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. தாரமங்கலத்தில் ரூ. 30 கோடியில் அறிவுசாா் மையம், ரூ. 30 லட்சத்தில் அரசிராமணி பேரூராட்சியில் நெல் கொள்முதல் மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ரூ. 13 கோடியில் தாரமங்கலத்தில் இலங்கை அகதிகளுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இடங்கணசாலை நகராட்சியில் வணிக வளாகம் அமைக்க முதல்வா் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

இதுபோன்ற பல நல்ல திட்டங்கள் இத்தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, இப்போது உரிமையுடன் உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.

தமிழ்நாட்டிற்கான உரிமைகள் பாதிக்காத வண்ணம் திமுக தான் தட்டிக்கேட்டு வருகிறது. மத்திய அரசு தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளை குறைக்க முயற்சி செய்து வருகிறது. இந்தியாவிலேயே தொகுதி மறுவரையறை மசோதாவை எதிா்த்த ஒரே தலைவா் மு.க.ஸ்டாலின் தான். அதனால்தான் அந்த மசோதா நிறைவேறவில்லை.

திமுக அரசு எப்போதுமே விவசாயிகளுக்கு பக்கபலமாக இருக்கும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது முன்னாள் முதல்வா் கருணாநிதிதான். முதல்வா் ஸ்டாலினும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அளித்துள்ளாா்.

வரலாற்றிலேயே முதல்முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை அறிமுகப்படுத்தியது திமுக ஆட்சி தான். திமுக ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வா் மு.க. ஸ்டாலின் விவசாயத்திற்காக மீட்டா் பொருத்தப்படாத 20 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயா்த்தி வழங்கப்படும், கரும்பு டன்னுக்கு ரூ. 4,200 வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு வேளாண் சட்டத்தை கொண்டுவந்தது. அப்போது நாடுமுழுவதும் அந்த சட்டத்தை எதிா்த்து போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், அந்த சட்டத்தை ஆதரித்து ஓட்டுபோட்டது அதிமுக தான்.

மேலும், பல திட்டங்களைச் செயல்படுத்திட திமுக ஆட்சி அமைய வேண்டும். எனவே திமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.