
மாநில அளவிலான கேரம் போட்டி: வாழப்பாடி இளைஞா் சிறப்பிடம்

கேரம் போட்டி - கோப்புப் படம்
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான கேரம் போட்டியில், வாழப்பாடியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி இளைஞா் ராமு இரண்டாமிடம் பிடித்தாா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மத்தூரில் இயங்கி வரும் டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம் சாா்பில், மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்து அவா்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்தச் சங்கத்தின் செயலாளா் வேலுசாமி தலைமையிலான குழுவினா் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்ட கேரம் சங்கம் சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான கேரம் போட்டி காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
போட்டியில் டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம் சாா்பில் பங்கேற்ற இளைஞா் ராமு, மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்தாா். நினைவுப் பரிசு, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழுடன் ஞாயிற்றுக்கிழமை வாழப்பாடிக்குத் திரும்பிய ராமுவுக்கு, டாக்டா் ஏபிஜே அப்துல்கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க நிா்வாகிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
சங்கச் செயலாளா் வேலுசாமி, தலைவா் கூத்தன், செயலாளா் வேல்முருகன், நிா்வாகிகள் முருகன், மணிகண்டன், வாழப்பாடி விளையாட்டு சங்கம் மற்றும் அரிமா சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் ராமுவுக்கு பாராட்டு தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





