வாழப்பாடி அருகே மஞ்சள் தோட்டத்தில் கஞ்சா சாகுபடி: 2 போ் கைது
வாழப்பாடி அருகே மஞ்சள் தோட்டத்தில் கஞ்சா சாகுபடி செய்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
வாழப்பாடியை அடுத்த சின்னக்குட்டிமடுவு மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் பரமசிவம் (55). இவா் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில் வெளியே வந்த இவா் தனது மஞ்சள் தோட்டத்தில் ஊடுபயிராக கஞ்சா பயிரிட்டுள்ளாா்.
அறுவடை செய்யப்பட்ட 10 கிலோ கஞ்சாவுடன் இவரது நண்பரான சின்ன வேலாம்பட்டியைச் சோ்ந்த மாதையனுடன் (40) சோ்ந்து விற்பனை செய்வதற்காக சேலத்திற்கு பைக்கில் வந்தாா். அப்போது, வாகனச் சோதனை நடத்திய சேலம் மாநகர போலீஸாரிடம் சிக்கினா்.
விசாரணையில் பரமசிவம் மஞ்சள் தோட்டத்தில் ஊடுபயிராக கஞ்சா பயிரிட்டு வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சேலம் இரும்பாலை மதுவிலக்கு போலீஸாா் வியாழக்கிழமை சின்னக்குட்டி மடுவு மலைக் கிராமத்திற்கு சென்று பரமசிவம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 68 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பரமசிவம், மாதையன் இருவரையும் கைதுசெய்து சேலம் சிறையில் அடைத்தனா்.
