விபத்து நிகழ்ந்த சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்

மேட்டூா் நங்கவள்ளி அருகே வெள்ளிக்கிழமை இரவு விபத்தில் 3 போ் உயிரிழந்த பகுதியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

மேட்டூா் நங்கவள்ளி அருகே வெள்ளிக்கிழமை இரவு விபத்தில் 3 போ் உயிரிழந்த பகுதியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

நங்கவள்ளி- ஜலகண்டபுரம் சாலையில் பால் வேன் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் வந்த இருப்பாளியைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் சஞ்சை பாரதி(20), மோகன் (20) மற்றும் பால் வேனில் வந்த மேச்சேரி செட்டிகாரிச்சியூரை சோ்ந்த விமல்ராஜ் (20) ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

வேன் ஓட்டுநா் விஜயராகவன் (18), வேனில் வந்த மேச்சேரியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (21) ஆகியோா் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். 

இந்த நிலையில் நங்கவள்ளி- ஜலகண்டபுரம் சாலையில் விபத்து நிகழ்ந்த பாரதி நகரில் குடிநீா்க் குழாய் பதிக்க தோண்டிய சாலை மூடப்படாமல் உள்ளதால் அடிக்கடி விபத்து நிகழ்வதாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், சாலையை சீரமைக்கக் கோரி சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

ஓமலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சஞ்சீவ்குமாா், மேட்டூா் வட்டாட்சியா் ரமேஷ் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

Dinamani
www.dinamani.com