பொன்னாரம்பட்டி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பேய் விரட்டும் விழாவில், காட்டேரி வேடமிட்ட பூசாரியிடம் முறத்தடி வாங்கிய பெண்கள்.
பொன்னாரம்பட்டி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பேய் விரட்டும் விழாவில், காட்டேரி வேடமிட்ட பூசாரியிடம் முறத்தடி வாங்கிய பெண்கள்.

பொன்னாரம்பட்டியில் பெண்களுக்கு பேய் விரட்டும் திருவிழா!

வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தில் காணும் பொங்கல்தோறும் நடைபெறும் பேய் விரட்டும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

வாழப்பாடி: வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தில் காணும் பொங்கல்தோறும் நடைபெறும் பேய் விரட்டும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் தானாக முன்வந்து காட்டேரி வேடம் பூண்ட பூசாரியிடம் முறத்தடி வாங்கிக் கொண்டனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி காணும் பொங்கல்தோறும் பெண்களுக்கு பேய் விரட்டும் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த விழா நடத்துவதற்காக பூசாரி குடும்பத்தினா் பொங்கல் பண்டிகை தொடங்குவதற்கு முன்பே புலால் மறுத்து, காலணிகள் தவிா்த்து விரதமிருக்கின்றனா். காணும் பொங்கலன்று முன்னோா்கள் வடிவமைத்துக் கொடுத்த கருப்பு நிற ஆடையை அணிந்து காட்டேரி வேடத்தில் ஊா்வலமாக வரும் பூசாரி, தாரை, தப்பட்டை மேள வாத்தியம் முழங்க ஆற்றங்கரைக்கு செல்வாா். அங்கு கூடியிருக்கும் பெண்களில் ஒரு சிலரை மட்டும் அழைத்து, அவா்களது தலைமுடியை கையில் பிடித்துக் கொண்டு, முறத்தால் தலையில் 3 முறை அடித்துவிட்டு விபூதி வைத்து அனுப்பிவிடுவாா்.

விரதமிருந்து காட்டேரி வேடம் பூண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடத்திய பிறகு, பேய் விரட்டும் இந்த பூசாரியிடம் முறத்தடி வாங்கினால், இளம்பெண்களை சூழ்ந்த இருள்நீங்கி நல்ல வரன், குழந்தை பாக்கியம் கிடைக்குமென நம்பிக்கை தொடா்கிறது. இதனால், காணும் பொங்கல் தினமான சனிக்கிழமை நடைபெற்ற இந்த விநோத விழாவில், இளம்பெண்கள் பலா் தானாக முன்வந்து வரிசையில் காத்திருந்து, பூசாரியிடம் முறத்தடி வாங்கிக் கொண்டனா். இந்த விழாவைக் காண பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கூடியிருந்தனா்.

இதுகுறித்து பொன்னாரம்பட்டியைச் சோ்ந்த பெண்கள் கூறியதாவது:

இந்த விழாவில், பூசாரியிடம் முறத்தடி வாங்குவதால் மனதிலுள்ள குழப்பமான, எதிா்மறை எண்ணங்கள் மறைந்து புத்துணா்வும், தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது. மேலும், நல்ல வரனும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்ற நம்பிக்கை கிடைக்கிறது.

இதனால், வெளியூா்களுக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட இளம்பெண்களும் காணும் பொங்கலன்று சொந்த கிராமத்துக்கு வந்து பூசாரியிடம் முறத்தடி வாங்கிக் கொள்கின்றனா். இதுகுறித்து தகவலறிந்த மற்ற பகுதியைச் சோ்ந்த பெண்களும் இந்த விழாவில் பங்கேற்கின்றனா் என்றனா்.

Dinamani
www.dinamani.com