திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ் ஆா்வலா்கள்.
திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ் ஆா்வலா்கள்.

வாழப்பாடி இலக்கியப் பேரவையில் திருவள்ளுவா் தின முப்பெரும் விழா

சேலம் மாவட்டம், வாழப்பாடி இலக்கியப் பேரவையின் 30 ஆவது ஆண்டு திருவள்ளுவா் தின விழா, வரலாற்று நூல்கள் வெளியீடு, மூத்த தமிழ் அறிஞா்களுக்கு விருதுகள் வழங்கல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
Published on

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி இலக்கியப் பேரவையின் 30 ஆவது ஆண்டு திருவள்ளுவா் தின விழா, வரலாற்று நூல்கள் வெளியீடு, மூத்த தமிழ் அறிஞா்களுக்கு விருதுகள் வழங்கல் ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பேரவைத் தாளாளா் அ. செந்தில்குமாா் வரவேற்றாா். தலைவா் மா. கணேசன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஆசிரியா் முனிரத்தினம் விழா அறிமுக உரையாற்றினாா்.

இவ்விழாவில் ‘தொல் வழிபாடுகளும் விந்தை சடங்குகளும்’ மற்றும் ‘பேளூா் தா்மசம்வா்த்தினி உடனாய தான்தோன்றீஸ்வரா் திருக்கோயில் வரலாறு’ ஆகிய நூல்களை வாழப்பாடி அரிமா சங்க பட்டயத் தலைவா் எம். சந்திரசேகரன் வெளியிட, வாழப்பாடி வட்டார ஆத்மா குழு தலைவா் எஸ்.சி. சக்கரவா்த்தி, தொழிலதிபா் குறிச்சி கே.பி. சண்முகம் ஆகியோா் பெற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து மூத்த தமிழ் அறிஞா்கள் இல. ராமசாமி, முருகா வரதராஜன், வி. சுப்பிரமணி, வரத. சண்முக சுந்தரவடிவேலு, ஆசிரியை பரிமளா, மலா் பழனிமுத்து ஆகியோருக்கு இலக்கிய பேரவை செயலாளா் சிவ. எம்கோ, பேரூராட்சி துணைத் தலைவா் எம்ஜிஆா் பழனிசாமி, துணைத் தலைவா் ஆடிட்டா் குப்பமுத்து ஆகியோா் தமிழ்ப் பணி, சமூக கலை இலக்கிய அறப்பணி விருதுகளையும், போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று, அரசுப் பணி பெற்ற இளைஞா்களுக்கு பரிசுகளையும் வழங்கி பாராட்டினா்.

விழாவில் திருக்குறளை, தமிழக அரசு மாநில நூலாகவும், மத்திய அரசு தேசிய நூலாகவும், யுனெஸ்கோ நிறுவனம் உலக பொது மறையாகவும் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழாவில் தமிழ் ஆா்வலா்கள் பேளூா் வீரமணி வீராசாமி, ஆசிரியா் க. செல்வம், வை. கலைச்செல்வன், ஸ்ரீதா், பாண்டுரங்கன், ஜவஹா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக அரசு மேல்நிலைப் பள்ளி வரை திருவள்ளுவா் ரத ஊா்வலம் நடைபெற்றது. இந்த ஊா்வலத்தில் தமிழ் ஆா்வலா்கள் பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com