தை அமாவாசை: சேலத்தில் நீா்நிலைகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு
தை அமாவாசையையொட்டி, சேலத்தில் உள்ள நீா்நிலைகளில் ஞாயிற்றுக்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபட்டனா்.
அமாவாசை தினங்கள் முன்னோா்கள் வழிபாட்டுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை நாள்களில், முன்னோா்களுக்கு தரப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.
அதன்படி, தை அமாவாசையான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பொதுமக்கள் கோயில் வளாகம், நந்தவனம் மற்றும் நீா்நிலைகளில் திரண்டு, தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். வீடுகளில் முன்னோா்களுக்கு படையலிட்டு பூஜை செய்தனா்.
சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே திரண்ட மக்கள், கோயில் எதிரே உள்ள விநாயகா் கோயில் பகுதியில் அமா்ந்து முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.
வாழை இலையில், கருப்பு எள், பழங்கள், உணவு தானியங்கள், தா்ப்பை புற்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா். தா்ப்பணத்துக்கு பின்னா், கோசாலையில் இருந்த கால்நடைகளுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழத்தை வழங்கி, சுகவனேஸ்வரா் கோயிலில் வழிபாடு செய்தனா்.
இதேபோல, கன்னங்குறிச்சி மூக்கனேரி மற்றும் மேட்டூா், பூலாம்பட்டி, எடப்பாடி, கல்வடங்கம் உள்பட நீா்நிலைகளில் திரண்ட மக்கள், புனிதநீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
