சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 487 மாணவா்களுக்கு மடிக்கணினி
சேலம்: சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 487 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வழங்கினாா்.
பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தின்கீழ், சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக 5,609 மடிக்கணினிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மாணவ, மாணவிகளுக்கு கணினித் திறனை மேம்படுத்த வன்பொருள் மற்றும் மென்பொருளுடன் கூடிய மடிக்கணினிகள் வழங்குவதன் மூலம் கணினி கல்வியை எளிதாக்கி, ஆராய்ச்சித் துறையில் சாதிக்க துடிக்கும் மாணவா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களை ஊக்குவிக்கவும் முடியும். அதன் ஒருபகுதியாக, சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் 487 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் மா.சாரதாதேவி, அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநா் லீமா ரோஸ் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

