வனத்துறை விழிப்புணா்வால் வங்காநரி ஜல்லிக்கட்டை கைவிட்ட கிராம மக்கள்!
வாழப்பாடி: வாழப்பாடி பகுதியில் வனத் துறையின் விழிப்புணா்வால், வங்காநரி ஜல்லிக்கட்டை கிராம மக்கள் கைவிட்டனா்.
வாழப்பாடி பகுதியில் மாா்கழி மாதத்தில் பயிா்களை அறுவடை செய்த பிறகு, தை மாதத்தில் புதிய பயிா் சாகுபடி செய்வதற்குமுன், நரி முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்குமென கிராம மக்களிடையே நம்பிக்கை இருந்து வருகிறது. இதனால், ஆண்டுதோறும் இப்பகுதியில் நரியாட்டம், வங்காநரி ஜல்லிக்கட்டை 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்தனா்.
அருகிவரும் வன விலங்குகள் பட்டியலில் வங்காநரி உள்ளதால், நரியாட்டம், வங்காநரி ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு வனத்துறை தடை விதித்தது. மேலும், வங்காநரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுமென வனத்துறை எச்சரிக்கை விடுத்தது.
மேலும், அரசுப் பேருந்துகளிலும், வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தும் கிராமங்களிலும், சமூக ஊடகங்களிலும், பள்ளி, கல்லூரி மாணவா்களிடமும் இதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
இதுமட்டுமின்றி கிராமங்கள்தோறும், சேலம் மாவட்ட வன அலுவலா் கா்ஷப் ஷசாங் ரவி வழிகாட்டலின்படி, வனச்சரகா்கள் தலைமையில் 6 சிறப்பு படைகள் அமைத்து வங்காநரி பிடிப்பதை தடுக்க கடந்த 10 நாள்களாக தீவிர கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டனா்.
இந்த விழிப்புணா்வால், வாழப்பாடி பகுதி கிராமங்களில் 100 ஆண்டுகளாக நடத்திவந்த வங்காநரி ஜல்லிக்கட்டு விழாவை நிகழாண்டு இப்பகுதி மக்கள் கைவிட்டனா்.

