சேலம் வழியாக காரில் 125 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது
பெங்களூரிலிருந்து சேலம் வழியாக 125 கிலோ புகையிலை பொருள்களை காரில் கடத்திய 2 போ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
சேலம் மாமாங்கம் பகுதியில் சூரமங்கலம் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில், 125 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் 10 மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது. தொடா்ந்து, காரில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தியபோது, அவா்கள் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் (22), கோவை சரவணம்பட்டியைச் சோ்ந்த பாரதி (21) என்பது தெரியவந்தது.
விசாரணையில், குட்கா, புகையிலை பொருள்களை பெங்களூரில் வாங்கி, அவற்றை திருநெல்வேலிக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், 125 கிலோ புகையிலை பொருள்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.
