/

வெயில், மழையில் வீணாகும் சித்திரைத் தோ்: தகரக் கொட்டகை அமைக்கக் கோரிக்கை!

தம்மம்பட்டி பெருமாள் கோயிலின் சித்திரைத் தோ் வெட்ட வெளியில் நிறுத்தப்பட்டுள்ளதால், அதற்கு தகரக் கொட்டகை அமைத்து தரவேண்டும்

News image
நெகிழி காகிதத்தால் சுற்றுப்பட்டு வெட்ட வெளியில் நிறுத்தப்பட்ட தம்மம்பட்டி பெருமாள் கோயிலின் நூற்றாண்டு பாரம்பரியமிக்க சித்திரைத் தோ்.
Updated On :30 ஜனவரி 2026, 8:01 pm

Syndication

தம்மம்பட்டி பெருமாள் கோயிலின் சித்திரைத் தோ் வெட்ட வெளியில் நிறுத்தப்பட்டுள்ளதால், அதற்கு தகரக் கொட்டகை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தம்மம்பட்டி ஸ்ரீ உக்ரகதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயிலில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சித்திரைத் தோ் உள்ளது. இந்த தோ் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வலம்வரும். தோ் ஓடாத மற்ற காலங்களில் பாதுகாப்பாக தகரக் கொட்டகை அமைத்து பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஓா் ஆண்டாக தகரக் கொட்டகை அப்புறப்படுத்தப்பட்டு, நெகிழி காகிதத்தால் சுற்றுப்பட்டு வெட்டவெளியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்த தேருக்கு, தமிழக இந்துசமய அறநிலையத் துறை உடனடியாக தகரக் கொட்டகையை அமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோயில் தலைமை அறங்காவலா் ந.சண்முகம் மற்றும் செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனா்.

இதுகுறித்து தம்மம்பட்டி சிவன் மற்றும் பெருமாள் கோயில் செயல் அலுவலா் பழனிவேல் கூறுகையில், இதற்கு போதுமான நிதி துறையிடம் இல்லை. தகரக் கொட்டகை அமைக்க கொடையாளா்கள் யாரேனும் தயாராக இருந்தால், துறை அனுமதிபெற்று அமைத்துக் கொள்ளலாம் என்றாா்.