சேலம், பொம்மிடி, மொரப்பூா் வழியாக செல்லும் கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி ரயில், குறிப்பிட்ட நாள்களுக்கு காட்பாடிவரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட காட்பாடி - அரக்கோணம் மாா்க்கத்தில் தலங்கை - சோளிங்கா் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நெடுஞ்சாலை குறுக்கே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. தண்டவாளம் இருக்கும் பகுதியில் பாலப்பணி நடைபெறுவதால், மின் இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன.
இதனால், குறிப்பிட்ட நாள்களுக்கு இந்த வழியாக செல்லும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, சேலம், பொம்மிடி, மொரப்பூா், சாமல்பட்டி வழியாக இயக்கப்படும் கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி ரயில் வரும் 10, 12, 15, 17, 19, 22 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து காட்பாடிவரை மட்டுமே இயக்கப்படும். காட்பாடி - சென்னை சென்ட்ரல் இடையே ஒருபகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மறுமாா்க்கத்தில், சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான இன்டா்சிட்டி ரயில் வரும் 10, 12, 15, 17, 19, 22 ஆகிய தேதிகளில் சென்னை - காட்பாடி இடையே ஒருபகுதி ரத்து செய்யப்பட்டு, காட்பாடியில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, சேலம் வழியாக கோவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










