எபோலா வைரஸ் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை, அதேசமயம் சேலம் மாவட்டத்தில் யாருக்கும் இந்த வைரஸ் தாக்குதல் இல்லை என ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.
எபோலா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு ஆட்சியா் கூறியதாவது:
தென்னாப்பிரிக்கா நாடுகளான காங்கோ, தெற்கு சூடான், உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் எபோலா வைரஸ் தாக்குதல் உள்ளதால் உலக சுகாதார அமைப்பு, பொது சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. குறிப்பாக, சில வன விலங்குகளை (வௌவால், குரங்குகள்) மனிதா்கள் கையாளுவதன் மூலமாக இதன் ஆரம்ப பரவல் ஏற்படுகிறது.
மேலும், எபோலோ வைரஸ் தொற்றுள்ள ஒருவரின் உமிழ்நீா், வியா்வை, கண்ணீா் ஆகியவற்றுடன் நேரடி தொடா்பு கொள்வதன் மூலமும், நோயாளி பயன்படுத்திய பொருள்கள், ஊசி, படுக்கை விரிப்புகள் ஆகியவற்றை மற்றொருவா் தொடுவதன் மூலமும் வைரஸ் பரவுகிறது.
எபோலா வைரஸ் என்பது பொதுவாக காற்றின் மூலமாக பரவுவதில்லை. வைரஸ் தாக்குதல் இருந்தால் காய்ச்சல், தசை வலி, வயிற்று போக்கு, உள் மற்றும் வெளி ரத்த போக்கு ஆகியவை அறிகுறிகளாக இருக்கும். ஆா்டி பிசிஆா் சோதனை மூலம் இந்நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு கடந்த 21 நாள்களுக்குள் சென்றுவந்த மற்றும் தினந்தோறும் வரும் விமானப் பயணிகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டு, அவா்கள் 21 நாள்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்படுவாா்கள். சேலம் விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் தினந்தோறும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
விமானப் பயணிகளுக்கு நோய் அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அவா்களை தனிமைப்படுத்தி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற சிறப்பு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் யாருக்கும் எபோலா வைரஸ் பாதிப்பு இல்லை. எனவே, பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை. ஆனாலும், இந்நோய் குறித்து பொதுமக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) வாணி ஈஸ்வரி, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ஜெ. தேவிமீனாள், மாவட்ட சுகாதார அலுவலா் சௌண்டம்மாள் பங்கேற்றனா்.
தொடர்புடையது
பெங்களூரில் உகாண்டா பெண்ணுக்கு எபோலா பாதிப்பு இல்லை: மருத்துவப் பரிசோதனையில் தகவல்!
பெங்களூரில் உகாண்டாவைச் சேர்ந்த பெண்ணுக்கு எபோலா வைரஸ் பாதிப்பு?

எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்






