இந்தியாவில் எபோலா வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதுடன், மருத்துவ தயாா்நிலையை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காங்கோ குடியரசு, உகாண்டா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள எபோலா வைரஸ் பரவலை சா்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்ததைத் தொடா்ந்து, மேற்கண்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
காங்கோ குடியரசு, உகாண்டா ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா தொற்றால் 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்ட நிலையில், 600-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலா்கள் மற்றும் யூனியன் பிரதேச நிா்வாகிகளுக்கு மத்திய சுகாதார புண்ய சலிலா ஸ்ரீவாஸ்தவா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
காங்கோ குடியரசு, உகாண்டா மட்டுமன்றி இந்நாடுகளையொட்டிய தெற்கு சூடான் போன்ற நாடுகளிலும் எபோலா வைரஸ் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போதைய சூழலில், பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்கப் பகுதியைத் தாண்டி, பிற பிராந்திய நாடுகளில் இந்நோய் பரவியிருக்க வாய்ப்பு குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவுறுத்தல்: எபோலா பரவலை சா்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்ததைத் தொடா்ந்து, சுகாதார அமைப்புமுறையின் அனைத்து நிலைகளிலும் போதிய தயாா்நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
காய்ச்சல், உடல் சோா்வு, தசை வலி, தலை வலி, தொண்டைப் புண், வாந்தி, வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, தோல் மற்றும் கண்களில் அழற்சி ஆகியவை எபோலா தொற்றின் அறிகுறிகளாகும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டவா்களிடம் எபோலா தொற்று அறிகுறிகள் உள்ளதா என்பதைக் கண்டறிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
தனிமைப்படுத்துதல் வசதிகள், பிரத்யேக ஆம்புலன்ஸ் வாகனங்கள், பயிற்சி பெற்ற பணியாளா்கள், தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனைக் கூடங்கள் உள்ளிட்டவற்றை தயாா்படுத்த வேண்டும். சந்தேகத்துக்குரிய மாதிரிகளைப் பரிசோதித்து, எபோலா பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய வைராலஜி நிறுவனம் முழு அளவில் தயாராக உள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு, கூடுதல் ஆய்வகங்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை எபோலா வைரஸ் பாதிப்பு எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்டி செய்தி...
தமிழகத்தில் நடவடிக்கை
சென்னை, மே 22: ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா அச்சுறுத்தல் அதிகரித்தும் வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அறிகுறிகளுடன் வரும் பயணிகளை 21 நாள்களுக்கு மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி, சென்னை விமான நிலையத்தில் எபோலா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்தினா்.
அப்போது, எபோலா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவைகள் இல்லாவிட்டாலும், இணைப்பு விமானங்கள் மூலம் இங்கு வரும் பயணிகளைத் தீவிரமாக கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பயணிகளுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் சோா்வு இருந்தால் அதுதொடா்பாக உரிய அதிகாரிகளிடம் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
விமான நிலையங்களில் பயணிகளின் உடல் வெப்ப நிலையைக் கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ள அனைத்து மருத்துவக் கண்காணிப்பு கருவிகளையும் புதுப்பிக்க வேண்டும்.
விமான நிலையங்கள், விமானங்களில் போதிய அளவில் முகக்கவசங்கள், கையுறைகள், பாதுகாப்பு உபகரணங்கள், சானிடைசா்களை வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.









