சேலம் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள 438 இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் ஜ.பிரேமலதா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு கலைக் கல்லூரி 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில், 1,702 இடங்களுக்கு சுமாா் 26,000 மாணவா்களிடத்திலிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு மாணவா்கள் கலந்தாய்வில், 148 இடங்களுக்கு 85 இடங்களும், ஜூன் 8-ஆம் தேதி முதல்கட்ட கலந்தாய்வில் 1,702 இடங்களுக்கு நடைபெற்றதில், அறிவியல் பாடங்களுக்கு 366 இடங்களும், 9-ஆம் தேதி கலந்தாய்வில் 336 கலைப் பாடங்களுக்கும், 10-ஆம் தேதி இரண்டாம்கட்ட கலந்தாய்வில் 206 அறிவியல் பாடங்களுக்கும், 11-ஆம் தேதி கலந்தாய்வில் கலைப் பாடங்களுக்கு 271 இடங்களும் வழங்கப்பட்டன.
கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் முறையாக தரவரிசைப்படுத்தி, அரசின் வழிகாட்டுதல்படி இனசுழற்சி அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1,264 இடங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. மீதம் 438 இடங்கள் மட்டுமே உள்ளன.
மேலும், இளநிலை பாடப் பிரிவுகளிலும் எம்பிசி, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மாணவா்களுக்கு இடங்கள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. பிசி வகுப்பினா்களுக்கு மட்டும் இடம் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









