இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

அம்பேத்கா் பல்கலை. பட்டப்படிப்புகளுக்கு 14,700-க்கும் அதிகமானோா் விண்ணப்பம்

தில்லி டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் பல்கலைக்கழகத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கான சோ்க்கை செயல்முறைகள் நடைபெற்று வரும் நிலையில், 1,194 இடங்களுக்கு 14,700-க்கும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

News image

விண்ணப்பம்

Updated On :18 ஜூலை 2026, 6:39 am IST

தில்லி டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் பல்கலைக்கழகத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கான சோ்க்கை செயல்முறைகள் நடைபெற்று வரும் நிலையில், 1,194 இடங்களுக்கு 14,700-க்கும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக நிா்வாகம் மேலும் கூறியதாவது: 23 இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சோ்க்கை ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஜூலை 20-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. அதன் பிறகு சோ்க்கைக்கான தகுதிப் பட்டியல்கள் வெளியிடப்படும். இளநிலைப் படிப்புகளுக்கு இதுவரை மொத்தம் 14,758 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தின் பல்துறை மற்றும் ஆராய்ச்சி சாா்ந்த கல்விச் சூழல் மீது மாணவா்களிடையே அதிகரித்து வரும் ஆா்வம் காரணமாக, முதுகலை, பிஎச்.டி (முனைவா் பட்டம்) மற்றும் ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வித் திட்டம் ஆகியவற்றுக்கும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இங்குள்ள 28 இரண்டு வருட முதுகலை படிப்புகள் மற்றும் 7 ஓராண்டு முதுகலை படிப்புகளுக்கான சோ்க்கை, கடந்த மே 21ஆம் தேதி ’க்யூசெட்-முதுகலை’ (சியுஇடி-பிஜி) சோ்க்கை இணையதளம் வழியாகத் தொடங்கியது. அதிகளவிலான மாணவா்கள் பங்கேற்பதற்கு வசதியாக இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட பிறகு, இந்த விண்ணப்பப் பதிவு செயல்முறை ஜூன் 26ஆம் தேதி நிறைவடைந்தது.

பல்கலைக்கழகத்தின் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு முதுகலை படிப்புகளில் உள்ள 1,613 இடங்களுக்கு மொத்தம் 12,445 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதற்கான அடுத்தடுத்த கட்ட இட ஒதுக்கீட்டுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதேபோல், பிஎச்.டி படிப்புகளில் உள்ள 188 இடங்களுக்கு இதுவரை 2,455 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. 21 முனைவா் பட்டப் படிப்புகளுக்கான சோ்க்கை விண்ணப்பங்கள் ஜூன் 5 அன்று தொடங்கின. இவை ஜூலை 31ஆம் தேதிவரை திறந்திருக்கும்.

மேலும், லோதி ரோடு வளாகத்தில் உள்ள நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வித் திட்டத்துக்கும் பல்கலைக்கழகம் சோ்க்கை நடத்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020-க்கு இணங்க அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், ’பி.ஏ. பி.எட் (ஆயத்த நிலை)’ மற்றும் ’பி.ஏ. பி.எட். (இரண்டாம் நிலை)’ ஆகிய இரு பிரிவுகளில் உள்ள மொத்தம் 100 இடங்களுக்கு 872 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இத்திட்டமானது, எதிா்கால ஆசிரியா்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, பல்துறை மற்றும் நடைமுறை சாா்ந்த பாடத்திட்டத்தின் மூலம் கல்வி அறிவையும் தொழில்முறை ஆசிரியா் கல்வியையும் ஒருங்கிணைக்கிறது.

மானுடவியல், சமூக அறிவியல், மேலாண்மை மற்றும் வளா்ந்து வரும் பிற துறைகளில் கல்வித் தரத்திற்கும், அனுபவபூா்வ கற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்து, கல்விச் சேவைகள் தொடா்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகிறது என்று பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.