முத்தம்பட்டி ரயில்வே மேம்பாலம்: காணொலி மூலம் பிரதமா் திறப்பு
முத்தம்பட்டி ரயில்வே மேம்பாலத்தை காணொலி மூலம் பிரதமா் திறந்துவைத்த நிலையில், சிறுசிறு பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் செல்ல நெடுஞ்சாலைத் துறையினா் அனுமதிக்கவில்லை.
பிரதமா் மோடி
முத்தம்பட்டி ரயில்வே மேம்பாலத்தை காணொலி மூலம் பிரதமா் திறந்துவைத்த நிலையில், சிறுசிறு பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் செல்ல நெடுஞ்சாலைத் துறையினா் அனுமதிக்கவில்லை.
வாழப்பாடியை சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் கடலூா் சாலையில் குறுக்கிடும் முத்தம்பட்டி ரயில்வே கேட் கடந்தாண்டு மாா்ச் மாதம் மூடப்பட்டு, ரூ. 34 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்தன.
இதனால், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு ஆத்தூா், கள்ளக்குறிச்சி, சென்னை மற்றும் சிதம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் புதுப்பாளையம் புறவழிச் சாலையில் இருந்து தம்மம்பட்டி சாலை வழியாக வாழப்பாடிக்கு சென்றுவந்தன. இதனால் வாழப்பாடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பொதுமக்களும் அவதிக்குள்ளாயினா்.
எனவே, முத்தம்பட்டி ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடித்து, மேம்பாலத்தில் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டுமென சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, கட்டுமானப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைக்க அண்மையில் சென்னை வந்த பிதமா் நரேந்திர மோடி முத்தம்பட்டி பாலத்தை காணொலி மூலம் திறந்துவைத்தாா். இதையடுத்து, பாலத்தின் முகப்பில் வைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றிய பொதுமக்கள், பாலத்தில் புதன்கிழமை காலைமுதல் வாகனங்களை இயக்கத் தொடங்கினா்.
இருப்பினும், மேம்பாலத்துக்கு வண்ணம் தீட்டுதல், சாலைகளில் குறியீடுகள் வரைதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதால், வாகனங்கள் செல்ல நெடுஞ்சாலைத் துறையினா் அனுமதிக்கவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

