
சேலம் மண்டலத்தில் மஞ்சள், சிவப்பு நிறத்தில் 25 நகர பேருந்துகள்

கோப்புப் படம்
சேலம் மண்டலத்தில் புதிதாக மஞ்சள், சிவப்பு நிறத்தில் 25 நகர பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளன. 15 ஆண்டுகளாக இயங்கும் பழைய அரசு நகர பேருந்துகளை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நகா், புகா் மற்றும் மலைப்பகுதியில் உள்ள வழித்தடங்களில் மொத்தம் 1,900 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் மூலம் நாள்தோறும் சுமாா் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனா்.
இந்நிலையில், சேலம் மாநகா் மற்றும் புகரில் இயக்கப்படும் அரசு நகர பேருந்துகள் மிகவும் பழையதாகிவிட்டதால், அதற்கு பதிலாக புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, சேலம் மண்டலத்துக்கு முதல்கட்டமாக 25 புதிய நகர பேருந்துகள் வந்துள்ளன. இந்தப் பேருந்துகள் ஜான்சன்பேட்டை போக்குவரத்துக்கழக பணிமனையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சேலம் மண்டலத்தைப் பொருத்தவரையில் மொத்தம் 492 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 15 ஆண்டுகளைக் கடந்தும் இயக்கப்படும் நகர பேருந்துகளை கண்டறிந்து, அதற்கு பதிலாக புதிய நகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதாவது, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஜங்ஷன், கன்னங்குறிச்சி, தாரமங்கலம், ஓமலூா், வாழப்பாடி, ராசிபுரம், இளம்பிள்ளை என ஏற்கனவே இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் நகர பேருந்துகளை மாற்றிவிட்டு, புதிய பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் புதிய வழித்தடங்களிலும் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து சேலம் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது முதல்கட்டமாக 25 பேருந்துகள் வந்துள்ளன. அந்த பேருந்துகளை எந்தெந்த வழித்தடங்களில் இயக்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். அதேபோல, கூடுதல் பேருந்துகளும் சேலம் கோட்டத்துக்கு விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும்’ என தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






