கூட்டுறவுச் சங்கங்களில் 25,449 டன் உரம் கையிருப்பு: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் தகவல்
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் 25,449 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் கையிருப்பு உள்ளதாக ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.

உரம் - பிரதிப் படம்
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் 25,449 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் கையிருப்பு உள்ளதாக ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் நெல், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிா்கள் 70,204 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் யூரியா 7,905 மெட்ரிக் டன், டிஏபி 2,306 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,864 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 12,288 மெட்ரிக் டன், எஸ்எஸ்பி 1,086 மெட்ரிக் டன் என மொத்தம் 25,449 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் கையிருப்பு உள்ளன.
மேலும், கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக வழங்கப்பட்ட குறுகிய காலக் கடன்கள், மத்திய கால முதலீட்டுக் கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் நலத்திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
இதேபோல மல்பெரி சாகுபடி, பட்டுக்கூடு அறுவடை ஆகியவற்றின் மாதாந்திர முன்னேற்றம் குறித்து துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளை விரைந்து நிறைவேற்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தையொட்டி ஆட்சியா் அலுவலகத் தரைத்தளத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், பாரம்பரிய மரபுசாா் விதைகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் தயாரிப்பு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், வேளாண்மை இணை இயக்குநா் கு. சீனிவாசன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் க. மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







